பக்கம்:கரிகால் வளவன்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

33

காவிரிப்பூம் பட்டினத்தை அடைந்தான். யார் கண்ணிலும் படாமல், பகைவருடைய வஞ்சகச் செயலுக்குத் தப்பி உயிர் பிழைத்து வாழ்ந்திருந்த அவனைத் திருவருள் உலகறிய, ‘இவனே சோழ குலத் தோன்றல்’ என்று அறிவித்துவிட்டது. தெய்வத்தின் அருள் துணை அவனுக்கு இருந்தது. அதைக்காட்டிலும் வேறு பலம் எதற்கு? “பரம்பரையாகச் சோழ மன்னர் செய்த தவம் இப்படிப் பலித்தது!” என்று சான்றோர்கள் மனமுருகிச் சொன்னார்கள். “இதோ உங்கள் மன்னன் என்று தெய்வமே காட்டி விட்டது மன்னனை. இந்தப் பாக்கியம் வேறு எந்த நாட்டுக்கு உண்டு?” என்று மக்கள் பெருமிதத்தோடு மகிழ்ச்சி அடைந்தனர். பகைவர் தம் செயலடங்கி ஊக்கம் இழந்து சோர்வடைந்தனர்.

கரிகாலன் தான் சோழ இளவரசன் என்பதைச் சொல்ல இரும்பிடர்த்தலையாரும் இனி அவருக்கு என்ன பயம்? சோழ நாடு களி வெள்ளத்தில் மூழ்கியது. அமைச்சர்கள் சொர்க்க இன்பத்தில் ஆழ்ந்தனர். இரும்பிடர்த்தலையார் இறைவனையே கண்டது போன்ற நிலையில் இருந்தார்.

கரிகாலன், சுடப்பட்டு உயிர் உய்ந்த சோழ இளவரசன்; இன்னும் தக்க பருவம் வரப்பெறாத இளம் பருவத்தான்; ஆனாலும் நாட்டின் மன்னனாக மணிமுடி தரித்துச் சிங்காதனம் ஏறினான். மங்கியிருந்த சோழ நாடு விளக்கம் பெற்றது. மீண்டும் காவிரிப்பூம் பட்டினத்து அரண்மனையில் விளக்கை ஏற்றிவிட்டது தெய்வம்; அது ஒளிவிடத் தொடங்கியது.


3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கரிகால்_வளவன்.pdf/39&oldid=1232479" இலிருந்து மீள்விக்கப்பட்டது