பக்கம்:கரிகால் வளவன்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

3

அவர்கள் வயிறு பகீரென்றது. அவர்களுடைய துயரத்தை மிகுதியாக்குவதற்கு ஒரு தனிக் காரணம் உண்டு. இளஞ்சேட் சென்னிக்குப் பின் சோழ நாட்டை ஆள அவனுக்குப் பிள்ளை இல்லை. சோழர் குலம் இளஞ்சேட் சென்னியோடு அற்று விடுவதா? சோழ மரபில் உதித்த வேறு சிலர் அங்கங்கே இருந்தார்கள். சில வேளாளச் செல்வர்களெல்லாம் தாங்கள் சோழ மரபோடு தொடர்புடையவர்கள் என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். அந்தத் தாயாதிகளெல்லாம் சோழ சிங்காதனத்தைத் தமதாக்கிக் கொள்ள முந்துவார்கள். அப்போது நாட்டில் அமைதி நிலவுமா? பலர் கூடிக் கலகம் விளைவிப்பார்கள். வாழையடி வாழையாக வளர்ந்து வந்த மன்னர் வரிசை இப்படியா குலைய வேண்டும்?—நாட்டில் உள்ள பெருமக்கள் இவ்வாறு எண்ணி எண்ணி மறுகினர்.

காவிரிப்பூம் பட்டினத்தில் இருந்து அரசாண்டான் இளஞ்சேட்சென்னி. பட்டினமென்றால் அது சாமானியமான பட்டினமா? கடற்கரையை அடுத்த மருவூர்ப்பாக்கம் முழுவதும் ஓயாத ஒழியாத கூட்டம்; ஆரவாரம்; வியாபாரப் பண்டங்கள் பெருமலை போலக் கிடக்கும். உலகத்தில் உள்ள பல நாடுகளிலிருந்து வணிகர்கள் அங்கே வருவார்கள். தங்கள் பண்டங்களை விற்கவும் தமிழ்நாட்டுப் பண்டங்களை வாங்கிச் செல்லவும் அவர்கள் வருவார்கள். மருவூர்ப்பாக்கம் திருமகள் நடமாடும் இடம்; வர்த்தகம் சிறக்கும் பகுதி. அதை அடுத்துள்ளது பட்டினப் பாக்கம். அதுதான் நகரத்தின் உட்பகுதி, அரண்மனையும், நகர

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கரிகால்_வளவன்.pdf/9&oldid=1340555" இலிருந்து மீள்விக்கப்பட்டது