பக்கம்:கருத்துக் கண்காட்சி.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

39


பகுதியில் வெளியூர்ப் புலவர் ஒருவர் சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்தார். அதுகாலை, அவர் பிழைபடக் கூறிய ஒரு கருத்தைப் பெரியசாமிப் பிள்ளையின் மாணாக்கப் புலவர் ஒருவர் மறுத்தார். புலவர் இருவர்க்குமிடையே பெரிய சொற்போர் மூண்டது. உள்ளுர்ப் புலவர் வெளியூர்ப் புலவர்மேல் ‘அணுகுண்டுகளை’ அள்ளி அள்ளி வீசினார். வெளியூர்ப் புலவர் தாக்குப் பிடிக்கமுடியாமல் திக்குமுக் காடினார். அவ்வேளை, பிள்ளையவர்கள் வந்து, ‘வெளியூராரை நாம் மதித்துப் போற்றவேண்டும்’ என்று தம் மாணாக்கரிடம் கூறி அமரவைத்து, வெளியூர்ப் புலவர் தொடர்ந்து சொற்பொழிவாற்ற வழிசெய்து, ‘இறுதிவரை உடன் இருந்து இனிதே கூட்டத்தை முடித்துக் கொடுத்து விட்டுச் சென்றார்களாம்.

“பேராண்மை என்ப தறுகண் ஒன்றுற்றக்கால்
ஊராண்மை மற்றதன் எஃகு”

என்பது வள்ளுவர் வாய்மொழியாயிற்றே!

அகமும் முகமும்:

கீழ்ப்பாய்ச்சும், நெடுஞ்சட்டையும், வலப்புறத்தோளுக்கும் இடப்புற இடுப்புக்குமாகக் குறுக்குக் கச்சைபோல் போடப்பட்ட மேலாடையும், அழகிய தலைப்பாகையும் பெரிய மீசையும் மாநிறமும் நடுத்தரமான உயரமும் பருமனும் கொண்டிருந்த பிள்ளையவர்கள், அன்பும் அமைதியும்-கனிவும் பணிவும் கொண்ட தம் அகத்தோற்றத்தை முகத்தோற்றத்தில் வெளிப்படுத்தினார்.

நூல்கள்

இவ்வாறு பெறலரு நற்பண்புகளுடன் பெருந்தமிழ்ப் புலமை ஓச்சிய புலவர் ஏறாகிய பெரியசாமியவர்கள்