பக்கம்:கலிங்கத்துப்பரணி ஆராய்ச்சி.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



தென்தமிழ் தெய்வப் பரணி

11


பிரபந்த வகை

பிரபந்தங்கள் தொண்ணூற்றாறு என்று சொல்லுவது ஒருவகை மரபு. பிரபந்த இலக்கணங்கூறும் பன்னிரு பாட்டியல், வெண்பாப் பாட்டியல், நவ நீதப் பாட்டியல், சிதம்பரப் பாட்டியல், இலக்கண விளக்கப் பாட்டியல் ஆகிய நூல்களில் ஒன்றிலாயினும் பிரபந்தங்கள் தொண்ணூற்றாறு என்ற வரையறை காட்டப் பெறவில்லை ; அவற்றிற்கு இலக்கணமும் கூறப் பெறவில்லை. அவற்றில் கூறப் பெறும் இலக்கணங்களும் மாறுபட்ட கருத்துக்களுடன் மிளிர்கின்றன. தொண்ணூற்றாறு என்ற வரையறைக்குள் அடங்காத நொண்டி நாடகம், கப்பற் பாட்டு, வில்லுப்பாட்டு, கும்மிப்பாட்டு, கோலாட்டப் பாட்டு, ஆனந்தக் களிப்பு, கிளிக்கண்ணி, விலாசம், புலம்பல், உந்திபறத்தல், சாழல், தெள்ளேனம், வள்ளைப்பாட்டு, கவசம், ஓடப்பாட்டு, காதல், ஏற்றப்பாட்டு முதலான பல பிரபந்தங்களையும் காண்கின்றோம்.


பரணியின் இலக்கணம்

போர் முகத்தில் ஆயிரம் யானைகளைக் கொன்று வெற்றி கொண்ட வீரரைப் புகழ்ந்து பாடுவதைப் ' பரணி ' என்று வழங்குவர்.

ஆனை யாயிரம் அமரிடை வென்ற
மாணவ னுக்கு வகுப்பது பரணி[1]

என்பது இலக்கண விளக்கப் பாட்டியல் சூத்திரம். பெரும்போர் புரிந்து வெற்றி பெற்ற வீரனைச் சிறப்


  1. இலக்கண விள-சூத்-78.