பக்கம்:கலிங்கத்துப்பரணி ஆராய்ச்சி.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பேய்கள் உலகம்

37


றோம். கவிஞன் படைப்பு ஒர் அற்புதப் படைப்பு. இதனாலன்றோ குமரகுருபர அடிகள் நான்முகன் படைப்பையும் கவிஞன் படைப்பையும் ஒப்பிட்டு,

மலரவன்செய்

வெற்றுடம்பு மாய்வனபோல் மாயா புகழ்கொண்டு
மற்றிவர் செய்யும் உடம்பு, [1]

என்று கூறியுள்ளார்?

'கலிங்கத்துப் பரணி' என்பது கவிஞர் சயங் கொண்டாரது அற்புதப் படைப்பு; அவரது கற்பனையிலிருந்து மலர்ந்த ஈடற்ற ஒரு சிறு காப்பியம். காவியத்தில் இருவேறு உலகங்களைப் படைத்துக் காட்டுகிறார் கவிஞர். ஒன்று, மக்கள் உலகம் , மற்றொன்று, பேய்கள் உலகம், பதின்மூன்று அதிகாரங்களைக் கொண்ட அந்நூலில் கடவுள் வாழ்த்து போக நான்கு அதிகாரங்கள் மக்கள் உலகைப் பற்றிய செய்திகளைக் கொண்டவை ; ஐந்து அதிகாரங்கள் பேய்கள் உலகைக் காட்டுபவை; மூன்று அதிகாரங்கள் பேய்களின் தலைவியாகிய காளிதேவி, அவள் வாழும் சூழ்நிலை, அவள் கோவில் ஆகிய செய்திகளைப் பற்றியவை. எனவே, நூலினுள் எட்டு அதிகாரங்கள் பேய்கள் உலகத்தைக் காட்டுகின்றன என்று துணிந்து கூறலாம். இனி, கவிஞர் படைத்துள்ள பேய்களின் உலகைக் காண்போம்.

பேய்கள்

கலிங்கத்துப் பரணியில் கவிஞர் படைத்துள்ள பேயுலகிலுள்ள பேய்கள் பன்னெடுநாள் உணவின்றிப் பசிப்பிணியால் வாடுபவைகளாக வுள்ளன.


  1. குமரகுருபரர் : நீதி நெறி விளக்கம்.செய். 6.