பக்கம்:கலிங்கத்துப்பரணி ஆராய்ச்சி.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பேய்கள் உலகம்

39


பேய்களின் கால்களும் கைகளும் பனங்காடுகள் போல் உள்ளன. கால்கள் மிக நீண்டு விகார வடிவமாக உள்ளன. வாய் பெரிய குகையை வெல்லுந் தன்மையது. 'வன்பிலத்தொடுவாதுசெய் வாயின' என்று கூறுகிறார் கவிஞர். இத்தகைய வாயால் உணவு கொண்டாலும் நிரம்பாத வயிறு அவற்றிற்கு வாய்த்திருக்கின்றது.

உடல் மிகவும் இளைத்திருக்கின்றது; எலும்பும் நரம்புமாய்க் கிடக்கின்றது. இதனைக் கவிஞர்

வெற்றெ லும்பைந ரம்பின்வ லித்துமேல்
வெந்தி லாவிற கேய்ந்தவு டம்பினர்[1]

[வலித்தல்-கட்டுதல்; ஏய்ந்த-ஒத்த]

என்று கூறுகிறார். பேய்களின் கன்னங்கள் இரண்டும் ஒட்டி கண்கள் குன்றுகளின் குகைகளில் தோன்றும் கொள்ளிக்கட்டைகளைப்போல் விளங்குகின்றன. அவற்றின் முதுகிற்கு மரக்கலத்தின் பின் புறத்தைத்தான் உவமை கூறலாம். அவற்றின் கொப்பூழில் பாம்பும் உடும்பும் புகுந்து தாராளமாக உறங்கலாம்; அத்துணைப் பெரிதாக இருக்கின்றது. எனவே, கவிஞரும் அதனை 'ஒற்றைவான் தொளைப் புற்று' டன் உவமை கூறினார்.

பேய்களின் உடலிலுள்ள மயிர்கள் கரிய பாம்புகள் தொங்குவன போலிருக்கின்றன. மூக்குகளில் பாசி படர்ந்திருக்கின்றது. காதுகளில் முன்னதாகவே ஆந்தைகள் புகுந்து பதுங்கிக்கொண்டமையால் வௌவால்கள் பதுங்க இடமின்றி வலக்காதுகளுக்கும் இடக்காதுகளுக்குமாக உலாவுகின்றன. அவற்றின் பற்கள் மண்வெட்டி இலையைப்போல்


  1. தாழிசை-137