பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

viii

இலக்கியத்திற்கும் உளவியலுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. பெருங்காப்பியத்திலுள்ள கதை மாந்தர்கள் வாழ்க்கையிலுள்ள போராட்டங்கட்குக் குறியீடுகளாக அமைந்திருப்பது போல் தோன்றும். உண்மையில், அப்போராட்டங்கள் யாவும் தனிமனிதனின் உள்ளத்திலேயே தொடங்குகின்றன என்பது சிந்தித்து நோக்குவார்க்குப் புலனாகாமற் போகாது. இவைகளே தற்கால உளவியலின் பொருளாகவும் அமைகின்றன. விலங்கியல் ஆராய்ச்சியில் கண்ட உண்மைகளும் உளவியலில் ஏற்ற பெற்றி எடுத்துக்கொள்ளப் பெற்றுள்ளன.

ஆங்கிலத்திலுள்ள சிறந்த உளவியல் நூல்களில் ஆங்காங்குச் சிறந்த ஆங்கில இலக்கிய மேற்கோள்கள் காட்டப்பெறுகின்றன. இவை படிப்போருக்கு ஒருவிதத் தனி இன்பத்தை நல்குகின்றது. இந்தச் சான்றோர்களின் அடிச்சுவடுகளைப் பின் பற்றியே பேராசிரியர் ரெட்டியாரும் கம்பராமாயணம், திருமந்திரம், திருவருட்பா, திருக்குறள், பாரதியார் கவிதைகள், போன்ற தமிழ் இலக்கியங்களிலிருந்து பொருத்தமான மேற்கோள்களைக் காட்டியுள்ளார். இவை தமிழில் உளவியலைக் கற்பாருக்கு உளவியல் உண்மைகளைத் தெளிவாக மனத்தில் அமைத்துக்கொள்ள துணைபுரியும் என்பதற்கு ஐயமில்லை.

இந்நூலில் கல்வி என்பது இயற்பியல் சூழ்நிலைக்கும் சமூகச் சூழ்நிலைக்கும் பொருத்தப்பாடு அடைவதே என்பதையும், (பக். 27) மாணாக்கர்களின் பல்வேறு ஆளுமைக் கோலங்களை ஓரளவு கட்டுப்பாடுள்ள வகுப்பறையிலும், ஓரளவுகட்டுப்பாடற்ற நிலையிலுள்ள வகுப்பறைக்கு வெளியிலும் புலனாவதைத் தெளிவாக்குவதும் (பக். 81), குழந்தையின் வளர்ச்சியும் துலக்கமும் இயல் 3-இல் தெளிவாகக் காட்டப் பெற்றிருப்பதும், குழந்தைக் கல்வியில் குடிவழியும் சூழ்நிலையும் பங்கு பெறுவதன் விளக்கமும் (இயல் -4), மாணாக்கர்களின் கல்வியில் ஊக்கு நிலை பெரும்பங்கு பெற்றிருப்பதன் விளக்கமும் (பக். 159-172), கற்றல்பற்றிய விதிகளின் விளக்கமும் (பக் 205-216), கற்றலில் அடங்கிய மூலக்கூறுகளாகிய அக்கறை, கவனம், புலன்காட்சி, கற்பனை, சிந்தனை, நினைவு, போன்றவற்றின் விரிவான விளக்கமும் (இயல்-7) தெளிவாக விளக்கப் பெற்றுள்ளன. இவை கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களும் மாணாக்கர்களின் பெற்றோர்களும், கல்வியில் ஆர்வங்காட்டும் பொது மக்களும் கருத்தில் இருத்த வேண்டியவை. அறிதிறனும் தனியாள் வேற்றுமைகளும் பற்றிய விளக்கமும் (இயல்.8), மாணாக்கர்களின் இயல்பு பிறழ்ந்த நடத்தைபற்றிய அறிவும் (இயல்.10) எல்லோரும் அறிந்து மாணாக்கர்களைப் பரிவுடன்