பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ix

கவனித்து அவர்களைத் திருத்துவதற்குத்துணை புரியும். ஒழுக்க வளர்ச்சிபற்றிய விளக்கம் (இயல்-11) ஆசிரியர்களும் பெற்றோர்களும் கருத்தில் இருத்த வேண்டியது இன்றியமையாதது. ஆசான் (இயல்.13) என்ற தலைப்பிலுள்ள செய்திகள் ஆசிரியர்கள் தற்சோதனை செய்து கொள்வதற்குத் துணை செய்யும்

இந்நூலில் கையாளப்பெற்றுள்ள கலைச் சொற்கள் பக்கங்களில் அடிக்குறிப்பாக அமைந்துள்ளன. படிப்போருக்கு இவை பெருந்துணையாக அமையும். இச்சொற்கள் அகர வரிசைப்படுத்திப் பின்னிணைப்பு-2 ஆக இணைக்கப்பெற்றுருப்பது நூல் எழுதுவோருக்குப் பயன்படும். இங்ஙனம் ஒரு முறையான அமைப்பில் தரமான விழுமிய நூலைப் படைத்த பேராசிரியர் ரெட்டியாரின் பெருந்தொண்டு பாராட்டப் பெற வேண்டியதாகும். ஆசிரியர்களும் கல்வியியல் பள்ளி, கல்லூரி மாணவர்களும் கல்வியில் நாட்டமுள்ள பெருமக்களும் இந் நூலைத் தக்க முறையில் பயன்படுத்துவார்களாயின் அதுவே அவர்கள் நூலாசிரியருக்குச் செய்யும் பெரு நன்றியாக அமையும். இத்தகைய பல அரிய பயனுடைய நூல்களை மேலும் மேலும் படைத்து இந்த ஆசிரியர் மொழிக்கும் தாய்மொழி மூலம் கற்பிக்கும் ஆசிரியர்கட்கும் பெருமக்களுக்கும் தொண்டாற்ற வேண்டும் என்று வாழ்த்துகின்றேன்.

A H.220
அண்ணாநகர்,
சென்னை - 600040
15–12–1985

கே. ஆர். மாணிக்கம்