பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
நூல் முகம்

என்னுடை உயிரே! என்னுளத் தறிவே!
என்னுடை அன்பெனும் நெறியாய்!
கன்னல்முக் களிதேன் கண்டமிர் தென்னக்
கலந்தெனை மேவிடக் கருணை
மன்னிய உறவே! உன்னை நான் பிறியா
வண்ணம்என் மனமெனும் கருவி
தன்னது வழி அற் றென்னுழைக் கிடப்பத்
தன்னருள் வரமது வேண்டும்.[1]

- தாயுமான அடிகள்

டல் நலம் பேணுவதற்கு உடலியல் அறிவு இன்றியமையாது வேண்டப்படுவதுபோல உளவளத்தைப் பேணி வளர்ப்பதற்கு உளவியல் அறிவும் மிகவும் இன்றியமையாதது என்பது கல்வி முறைவல்லார் கண்டமுடிவு. பாடத்தை மையமாகக் கொண்டு பயிற்றும் முறை (Subject-centered) மாறிக் குழந்தையை மையமாகக் கொண்ட முறை (Child. centered) வழக்கில் வந்து விட்டது. இந்தப் புதிய முறைக்கு முதன் முதலில் வித்திட்டவர் ரூஸோ {1712-1778) என்ற பேரறிஞர். அவர் எழுதிய ஒமிலி என்ற நூல்தான் புதிய முறை களின் வித்து எனலாம். இவர் கருத்துப்படி, "இயற்கை அன்னையிடமிருந்து வரும் எவையும் சிறந்து விளங்குகின்றன: ஆனால் அவையனைத்தும் மனிதன் கைப்பட்டதும் சீரழிகின்றன" என்பது இவர் கொள்கை, இதைத்தான் இன்று எல்லா நிலைக்கல்வி பயிற்றுதலிலும் நாம் காணும் உண்மை; கல்வி புகட்டுதலில் குழந்தைதான் முக்கிய கூறு, மனிதன் வளர்த்த பண்பாடல்ல என்பது இவர் கருத்து. இதனால்தான் ரூஸோவைக் கல்வி முறையின் காபர்னிகஸ் என்று வழங்குகின்றனர். பூமியை நடுவாக வைத்துதான் ஏனைய கோள்கள் இயங்குகின்றன என்ற பழைய கொள்கையைக் காபர்னிகஸ் மறுத்து கதிரவனை நடுவாகக் கொண்டுதான் அவை இயங்குகின்றன என்ற உண்மையை உலகிற்கு உணர்த்தியது போலவே, அதுகாறும் கல்வி ஏற்பாட்டினை (Curriculam) நடுவாக வைத்துக் கற்பிக்கப் பெற்ற முறையைத் தவறு எனக் கண்டித்து குழந்தையை நடுவாக வைத்துக் கற்பிக்கப் பெறவேண்டும் என்று கூறியவர் ரூஸோ. "குழந்தையை நன்றாக ஆராய்க; குழந்தையை அறிவது எளிதல்ல. குழந்தையைக் கவனி; இயற்கையோடு இசைந்து நட" என்பவை ரூஸோ கல்வித்துறையில் பணியாற்று பவர்கட்குக் காட்டிய மாபெறும் உண்மைகள், இவர் கொள்கை உளவியல் உண்மைகளை ஒட்டியும் உள்ளது.

இக்கொள்கைகளைப் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் அனை வரும் அறிவார்கள், அறிந்திருந்தும் கீழ்வகுப்புகளில் கற்பிக்கும்


  1. 3. தா. பா; ஆசையெனும் - 40.