பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கான வரையறை உண்டாகும். இவை யாவற்றையும் அநுதாபம், கருத்தேற்றம்’, பார்த்துச் செய்தல், கூடி வாழ் இயல்பூக்கம் முதலிய உளவியல் கூறுகளே சாத்தியமாக்குகின்றன். பெரும்பாலும் இந்தக் கூறுகள் உள்ளத்தின் 'நனவிலி பாகத்தில் ஆழ்ந்து கிடக்கின்றன. சிறுவயதில் பெற்ற சமூக உள்ளப் போக்குகள் நனவிலி உளப்பகுதியில் தங்கியிருந்து பிறகு பெரியவனாகும் பொழுது புறம்பே தோன்றுவதுண்டு. ஒருவன் பெரியவனான பிறகும் உள்ளக்கிளர்ச்சியைப் பொறுத்தவரை குழந்தையாகவே இருப்பான். அவனுடைய உளவியல் வளர்ச்சி தடைப்பட்டுப் போயிருக்கும், அதனால் அவன் குழந்தை போலவே தவறாக நடந்து கொள்வான். இச்சமூக நடத்தையை நன்கு அறிந்து கொள்ள வேண்டுமாயின், உளவியல் ஆராய்ச்சியில் மேற்கொள்ளப் பெறும் அ றி வி ய ல் முறையைக் கையாண்டு தெரிந்து கொள்ளலாம்.

உளவியலறிஞன் மனிதனை எங்ங்ணம் காண்கின்றான்: உளவியலறிஞன் மனிதனை ஓர் உயிரியாகவே கருதுகின்றான். பொருள்களடங்கிய சூழ்நிலையும் பிற மக்கள் அடங்கிய சூழ்நிலையும் உண்டாக்கும் தூண்டல்களுக்கு மனிதன் எங்ங்ணம் துலங்குகின்றான் என்பதைக் காண்கின்றான். எங்ஙனம். மனிதன் சூழ்நிலைக்கேற்பத் தன்னைப் பொருத்தியமைத்துக் கொள்ளுகின்றான் என்பதே அவன் மேற்கொள்ளும் ஆராய்ச்சி, மனிதனுடைய உடலுக்குப் புறம்ப்ே, ஆனால் அவனுடைய புலன் எல்லைக்குள்ளடங்கிய, எல்லாப் பொருள்களும் விசை களும் அடங்கிய ஓர் அமைப்பே சூழ்நிலை என்பது.

ஒவ்வொருவருடைய வாழ்க்கையையும் ஊன்றி நோக்கினால், அவரவர் தமக்கு அமைந்துள்ள சூழ்நிலையோடு ஒயாமல் ஊடாடிக் கொடுக்கல்.வாங்கல் செய்து கொண்டிருப்பது புலனாகும். இக் கொடுக்கல் வாங்கலே பொருத்தப்பாடு என்பது; அஃதாவது இயன்றவரை நன்னிலைக்கு மாறுதல். சில சமயம் தனியாள் சூழ்நிலையை யொட்டித் தன்னைப் பொருத்திக் கொள்கிறான். (எ.டு.) ஓரிடத்திலிருந்து பிறிதோரிடத்திற்குச் செல்லுதல்; ஒரு தோற்றுநோய்க்கு ஒரு தடையை (Immunity) ஏற்படுத்திக் கொள்ளுதல். சில சமயம் அவன் தனக்கேற்றாற்போல் சூழ்நிலையை மாற்றியமைக்கின்றான். (எ.டு.) ஒரு பொருளைத் தனக்கு அப்பால் தள்ளுதல் அல்லது அப்பொருளைத் தன்னை நோக்கி இழுத்தல்;


33. கருத்தேற்றம் -Suggestion. 34. நனவிலிஉளம்- Unconscious mind.