பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கல்வி உளவியலின் இயல்பும் அளவும்

15


கொண்டு செலுத்த முடிகின்றது. கற்பிக்கும் கலையில் உளவியல் அடிப்படை அறிவியலாகச் செயற்படுகின்றது.

மூன்றாவது : ஆசிரியர் தம்மைச் சரியாக உணர்வதற்கும் தம் பணியின் பலனைச் சரியாக மதிப்பிடுவதற்கும் துணையாக இருத்தல். மானிடத்திறன்களின் வீச்சினை: அறியும் அறிவினையும் தம்முடைய திறனைத் தம்முடன் பணியாற்றும் தோழ ஆசிரியர்களின் திறனுடன் ஒப்பிட்டுப் பார்ப்பதற்குரிய ஆற்றலையும்' உளவியல் தருகின்றது. அதனால் தம்முடைய மதிப்பைச் சரியான முறையில் அளவிட்டுத் தம்முடன் பணியாற்றுவோரிடம் அமைதியுடன் வாழத் துணை செய்கின்றது. தம்முடைய ஆற்றல்கள் யாவை என்பதை அறிந்து கொள்ளாமலேயே பல ஆசிரியர்கள் தொழிலில் நுழைகின்றனர். தம்முடைய வேலையைப்பற்றிப் பெரும் பாராட்டை எதிர் பார்த்து அது கிடைக்காவிடில் அவர்கள் சோர்வு அடைகின்றனர். ஒருவர் அமைதியான மனநிலை எய்த வேண்டுமானால் அவர் தம்முடைய நற்கூறுகளையும், வலுவற்ற கூறுகளையும் அறிந்து அதற்கேற்றவாறு செயலாற்றுதலேயாகும். இத்தகைய அறிவு நற்கூறுகளைப் பெரும்பயன் அடைவதில் பயன்படுத்தலாம். குறைபாடுகள் நேரிடுவதைக் குறைத்துக் கொள்ளலாம். "உன்னை அறிந்து கொள்" என்று மேலே குறிப்பிட்ட அருள்மொழியினை ஆசிரியரும் தம்மை அறிந்து கொள்வதில் மேற்கொள்ள வேண்டியது இன்றியமையாதது. உளவியல் அதற்குத் துணை நிற்கின்றது.

உளவியல் ஆராய்ச்சி முறைகள்

உளவியலில் சில ஆராய்ச்சி முறைகள் மேற்கொள்ளப் பெறுகின்றன. அவற்றைச் சிறிது அறிந்து கொள்வோம்.

உற்றுநோக்கல் முறை: எல்லா நூல்களும் கையாளும் முறைகளில் முதலில் தோன்றுவது உற்றுநோக்கல் முறையாகும். இதில் இரண்டு வகையுண்டு. ஒன்று, அகக்காட்சிக்க; மற்றொன்று, புறக்காட்சி. உளவியலார் பண்டைநாள் தொட்டுக் கையாளுவது அகக் காட்சியாகும். பண்டை நாளில் அஃதொன்றே முறையாய் விளங்கியது. அகக்காட்சி என்பது


41. திறன்-Capacity.
42. வீச்சு-Range.
43. ஆற்றல்-Ability.
44. மதிப்பு-Worth.
45. அகக்காட்சி-Introspection.