பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16

கல்வி உளவியல் கோட்பாடுகள்


ஒருவர் தம்முடைய மனத்தின் செயலையோ அதுபவத்தையோ உள் நோக்கித் தெரிந்துகொள்ளுதலாகும். உள்ளத்தின் செயல்கள் தனித்தனியே ஒவ்வொருவருக்கும் உரியவை. ஆதலின், பிறரால் அவற்றை எளிதில் அறிய இயலாது. அவரவர்களே தமது மனநிலையை வெளியிட்டால் மட்டுமே நாம் அறிதல் கூடும். அவ்வாறு எடுத்துரைக்க வேண்டுமாயின் அவ்வுள்ளச் செயல் நிகழ்ந்தவுடனேயே, அவர்கள் அவற்றை உள்நோக்கிக் காண்டல் வேண்டும். உள்நோக்கி ஆராய் என்பது சற்றுக் கடினமே. மேலும், உள்ளத்தின் நிலைக செயல்களும் மாறிக்கொண்டே போகும் இயல்புடையவை; அவற்றைச் சரியாகக் கவனிப்பது எளிதன்று. தவிர விலங்குகள், குழவிகள், பித்தர்கள், காட்டுமிறாண்டிகள் போல் முன்னேற்ற மடையாதவர்கள் ஆகியோரின் உள்ளத்தைப்பற்றிய செய்திகளை அகக்காட்சியால் அறிய முடியாது; வருணிக்கவும் இயலாது. இன்னும் ஓர் இடர்ப்பாடும் உண்டு. சினம், இன்பம் போன்ற உள்ளத்தின் செயல்களை விருப்பு வெறுப்பின்றியும் திட்டமாகவும் உற்று நோக்குவதென்பது அருமையினும் அருமை. வெகுண்டு விழும்பொழுது வெகுளி வரும் வழியை உற்று நோக்கினால் வெகுளி மறைந்தன்றோ ஓடும்! இது கானும் கண்களையே காண முயல்வது போலாகுமன்றோ? இம் முறையில் உள்ளத்தின் நிலையை ஆராய முயலுதல் இருளை ஆராய மின் விளக்கை ஏற்றுதல் போலாகும் என்கிறார் ஒரு பெரியார். ஆனால், இம்முறை எளிதன்றாயினும், அசாத்தியம் அன்து. உள்ளத்தின் செயல் நடந்து கொண்டிருக்கும்போதே, அஃதாவது அதன் இயல்பு மாறுவதற்கு முன், அதை நினைவு கூர்ந்து அதன் இயல்பை அறியலாம். ஆகவே, அகக்காட்சியனைத்தும் பின்னோக்கம்: ஆகும். உணவை உண்டு உவப் பதைவிட அதனைக் கண்டு களிப்பதற்கு ஈது ஒப்பாகும், எனினும், பயிற்சியாலும் பழக்கத்தாலும் இம் முறையின் திறனை மிகுதிப்படுத்தலாம். பல உள்ள நிலைகளைப் பற்றி வேறு வகையில் அறிய இயலாமையின் இம் முறையையும் நாம் மேற்கொள்ளுகின்றோம்.

சில உளவியலார் இயற்பியல் போன்ற பிற நூல்களிலுள்ளதைப் போல் புறக் காட்சியையும் கையாளுகின்றனர். இக் காரணத்தால் உளவியல் அண்மைக் காலத்தில் விரிவடைந்துள்ளது. உள்ளம் உடலுடன் நெருங்கிய தொடர்புடையதாயிருப்பதால் உள்ளச் செயல்கள் தோன்றும்போது உடல் மாறுபாடுகளும் தோன்றுகின்றன. ஒருவர் சினங்கொள்ளும்பொழுது


46. பின்னோக்கம்-Retrospection.