பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

கல்வி உளவியல் கோட்பாடுகள்


மேற்கொள்ளப் பெறுகின்றது. குறிப்புகளையும் கதைகளையும் கொண்டு விஷயங்களையும் விளக்கமுயலுகின்றது இம்முறை. இது முற்றிலும் நம்பத்தக்கதன்று. பெற்றோர்கள் தம் செல்வக் குழந்தைகளைப் பற்றியும் செல்வப் பிராணிகளைப் பற்றியும் உள்ளது உள்ளபடி கூறாமல் மிகைபடக் கூறுவது இயல்பு. காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு அன்றோ? கதைகளும் குறிப்புகளும் உண்மையைப் பெரிதென நினைக்காமல் சுவையையும் கற்பனைச் சிறப்பையும் பெரிதெனக் கருதுபவை. நாயைப்பற்றிய உளவியற் கதை யொன்றில் ஒருவர் தம் செல்வ நாயின் முன் செந்நிறப் பொம்மையையும் நீலநிறப் பொம்மையையும் காட்டும்போதெல்லாம், அது செந்நிறப் பொம்மையே விரும்பியதைக் கொண்டு அதற்கு நிறம்பற்றிய அறிவு உண்டு என்றார். ஆனால், அண்மையில் மேற்கொள்ளப்பெற்ற ஆய்வுகள் மூலம் நாய்கள் நிறக்குருடுடையவை என்ற முடிவு இடைத்துள்ளது. நாய் செந்நிறப் பொம்மையைத் தேர்ந் தெடுப்பதற்குக் காரணம் அதன் மனம், கனம், திண்மை போன்ற வேற்றுமைகளாக இருந்திருக்கலாம். அல்லது தற்செயலாகவும் அவ்வாறு நேரிடலாம். ஆகவே, இம்முறை சிறந்ததாகாது. திட்டமாகக் கண்டவற்றையும், நிபந்தனைகளுக்குட்பட்டு அளக்கக்கூடிய விவரங்களையும் மட்டுமே ஏற்க வேண்டும்.

(ii) தனியாள் ஆராய்ச்சி முறை[1]: இது பொதுவாக ஒரு தனியாளைப் பற்றி முற்றிலும் விவரமாக அறிவதாகும். தனித்தனிக் குழந்தைகளின் செயல்களை நீண்டகாலம் குறித்து வைத்து, அக் குறிப்புகளிலிருந்து பொதுவிதிகளையறிய முயலுவது இம்முறை. மேனாடுகளில் குழந்தைகளின் உள்ளத் தியல்பினையும் உடல்நிலையினையும் ஆராய்ந்த அறிஞர்கள் குழந்தைகளைப் பற்றிப் பல குறிப்புகளை எழுதி வைத்துள்ளனர். சிறுவர்கள், மேதைகள், அறிவிலிகள் போன்றவர்களின் வரலாற்றைப் பற்றியும் இங்கனம் குறிப்புரைகள் எழுதப் பெற்றுள்ளன. இவற்றின் தொகுதியே தனியாள் வரலாறாகும், இதுவும் பயன் தரத்தக்க முறையே.

சில சமயம், நவீன அறிவியல் முறைப்படி ஒரு மாணாக்கனைப் பற்றி ஆழ்ந்து தெரிந்துகொள்ள வேண்டியது இன்றியமையாத தாகின்றது. மாணாக்கனுடைய பிரச்சினைகள் மிக நுணுக்கமும், சிக்கலும் உடையவை எனத் தோன்றினால் ஆசிரியர்கள் அவற்றை ஒரு வல்லுநரிடம் கூறலாம். படித்தல், எழுத்துக்கூட்டல், கணிதம் முதலிய பாடங்களில் நீடித்த


  1. 50. தனியாள் ஆராய்ச்சி முறை.Case study.