பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கல்வி உளவியலின் இயல்பும் அளவும்

21


அறை ஒன்றினைச் செயற்கை முறையில் அமைத்து அதில் இச் செடி கொடிகளைப் பயிர் செய்வித்து ஆராய்கின்றனர். இரண்டு, முற்காலத்தில் மின்னாற்றலைப்பற்றி அறிய இடி, மின்னல் இவை உண்டாகிற வரையில் காத்திருக்க வேண்டியிருந்தது. இப்பொழுது ஆய்வகத்தில் மின்னாற்றலை வருவித்து ஆய்கின்றனர். வேண்டியவற்றை வேண்டிய இடத்தில் வேண்டிய பொழுதில் வேண்டிய அளவில் ஆயத்தம் செய்வதே ஆய்வுமுறையின் சிறப்பாகும். இதில் நாம் முக்கியமாகக் கவனிக்க வேண்டிய தொன்றுண்டு, அது யாதெனில் ஒரு விளைவை இயற்றக்கூடிய பல கூறுகளுள் நாம் ஆராயும் கூற்றினைத் தவிர ஏனையவற்றை மாறாது வைத்திருக்க வேண்டும். இல்லையேல் அந்நிலையில் இக் கூற்றினது தனி வன்மையை மதிப்பிடல் இயலாது.

இன்று இத்தகைய ஆய்வு முறை உளவியலிலும் பயன்படுகின்றது. இத் துறையில் அதனைக் கையாளுவது கடினம் என்பதை அனைவரும் ஒப்புக் கொள்வர். அறிவியல் துறைகளில் திட்டமாகப் பயன்படுத்தப்பெறும் அளவுக்கு இம்முறையை உளவியலில் கையாள முடியாதுதான். காரணம், மிகச் சிக்கலானதொரு மனித நிலையில் செயற்படும் எல்லாக் கூறுகளையும் கண்டறிந்து, இக்கூறுகள் எல்லாவற்றிலும் சமமான இரண்டு தொகுதிகளைக் கண்டுபிடிப்பது அரிது என்பது ஒன்று. மற்றொன்று, சோதனை முறையில் சோதிக்கப்பெறும் இயற்கை வளர்ச்சி தடைப்படலாம்; அல்லது அபாயந்திற்குட்படலாம். எனினும், அண்மைக் காலத்தில் இம் முறையின் காரணமாக உளவியல் சிறந்த வளர்ச்சியை அடைந்துள்ளது. கல்வி உளவியல் கோட்பாட்டில் பல ஆய்வுகளையும் பல துண் கருவிகளையும் கொண்டு அரிய பெரிய உண்மைகளைக் கண்டுள்ளனர். பல்வேறு படிப்புமுறை, மனப்பாடம் செய்வதிலுள்ள கூறுகள், கவனத்தின் தன்மைகள் போன்றவைகளிலுள்ள பல பிரச்சினைகளுக்கு இம்முறையில் தீர்வு கண்டுள்ளனர்.

புள்ளியியல் :[1] புள்ளியியல் முறை இன்றைய அறிவியல் துறைகளில் சிறந்ததோர் இடம் பெறுகின்றது. கல்வி உளவியலிலும் இது சிறந்த முறையில் பயன்பட்டுள்ளது. புள்ளியியல் முறை என்பது கணிதத்துறையைச் சார்ந்த ஒரு முறை. புள்ளி விவரங்களைச் சேகரித்து ஒழுங்குபடுத்தி, வகுத்து, அளவு முறையில் அவற்றின் பொருண்மை காணும் ஒரு கணித முறை இது. இம் முறையால் ஆராய்ச்சி நிலைகளின் குறைபாட்டைப் பெரும்பாலும் நிறைவாக்கிக் கொள்ளலாம்;


  1. 55. புள்ளியல்-Statistics,