பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



இயல்-2


மனிதனும் சூழ்நிலையும்


பொருத்தப்பாடு

ந்த உயிரியும் சூழ்நிலைக்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக் கொள்ளும். இதுவே வாழ்க்கையின் 'இலக்கணம்' என்றுகூடக் கூறலாம். மனிதனும் ஒருவகை உயிரியே. ஆகவே, அவனும் தன் சூழ்நிலையோடு இடையறாது இடைவினை இயற்றிப் 'பொருத்தப்பாடு'[1] அடைகின்றான் . பொருத்தப்பாடு என்பது என்ன? மனிதன் தனக்கும் தன் சூழ்நிலைக்கும் இயைந்த தொடர்பை அடையும் பொருட்டுத் தன் நடத்தையை[2] இடை விடாது மாற்றும் முறையே பொருத்தப்பாடு என்பது. பொருத்தப்பாடு அமைந்தால்தான் எல்லா உயிர்களும் வாழ வழி அமையும்; அன்றேல் சாகவேண்டியதுதான். ஒரு செடியோ தவளையோ தான் இருக்கும் சூழ்நிலைக்கேற்றவாறு தன்னை அமைத்துக்கொண்டால்தான் உயிர்வாழலாம்; இன்றேல் மரித்துவிடும்.

ஆனால் உயர் இன உயிராகிய மனிதனின் நோக்கம் வேறு. மனிதன் சூழ்நிலையுடன் பொருத்தப்பாடு அடைவது மூன்று விதங்களினால். ஒன்று, தன் நடத்தையையும் மனப்பான்மைகளையும் சூழ்நிலைக்கேற்றவாறு மாற்றிக் கொள்வது; மற்றொன்று, தன் நடத்தைக் கேற்றவாறு சூழ்நிலையை மாற்றி அமைத்துக் கொள்வது; பிறிதொன்று, இரண்டுங் கலந்த கலவையினால் அமைத்துக் கொள்வது. குழந்தைப் பருவத்திலும் குமரப் பருவத்திலும் இப்பொருத்தப்பாடு தீவிர


3. இயற்பியற் சூழ்நிலை.Physical environment,

  1. 1. பொருத்தப்பா-Adjustment.
  2. 2. நடத்தை-Behaviour.