பக்கம்:குறும்பா.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
7

நம்மைச் சுற்றி நடக்கும் கோணல் மாணல்களை நகைச்சுவைதான் சிறந்த முறையில் எடுத்துக் காட்டும் தன்மையது. எனவேதான் பெருங் கலைஞர்கள் எல்லாம் நகைச்சுவையைப் பயன்படுத்தி வெற்றி கண்டுள்ளனர்.

பெர்னார்ட்சா, மார்க்கு துவைன், கலைவாணர் என்.எசு.கிருட்டிணன் இவர்களை எடுத்துக் காட்டாகக் கூறலாம்.

அரசியலின் பேரால் நடக்கும் தில்லு முல்லுகள், மதப் போர்வையில் மறைந்திருக்கும் சுரண்டுதல்கள், மக்களைத் தவறான வழியில் திருப்பும் திரை உலக ஒழுக்கக் கேடுகள், உண்மையையோ, ஒழுங்கையோ பற்றி அக்கறையில்லாமல் பெயர், புகழைத் தேடிக் கொண்டிருக்கும் இலக்கிய உலகக் கோணல்கள் எல்லாவற்றையும் கோவேந்தன்,நகைச்சுவையோடு எடுத்துக் காட்டுகின்றார். தீமைகளின் மேல் அருவருப்பு ஏற்படும்படி அவற்றை எடுத்துக் காட்டினால்தான் மக்கள் அவற்றை வெறுக்கக் கற்றுக் கொள்வார்கள். தம் அங்கதத்தின் வாயிலாக இதில் வெற்றி காண்கிறார் கோவேந்தன்.

உண்மை கசப்பாகத்தான் இருக்கும். பிழை செய்பவர்கள் தங்கள் பிழைகள் சுட்டிக் காட்டப்படுவதை ஒரு நாளும் விரும்புவதில்லை. இதனால் பிழைகளைச் சுட்டிக் காட்டுபவர்கள் பெரும்பாலோரின் வெறுப்புக்கு ஆளாவது இயற்கையே. அந்தக் காலத்திலிருந்து உண்மைகளை எடுத்துச் சொல்லிச் சொல்லிப் பெரும்பாலோரின் வெறுப்புக்கு ஆளாகிக் கொண்டிருப்பவர் கோவேந்தன். இருப்பினும் சிறிதும் கவலைப்படாமல், சுற்றி நடக்கும் கோணல் மாணல்களைச் சுட்டிக்காட்டும் பணியைத் தொடர்ந்து நடத்துகின்றார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறும்பா.pdf/10&oldid=1200659" இலிருந்து மீள்விக்கப்பட்டது