பக்கம்:குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

3. வளர விடுக

பூங்குழந்தை உலகத்திற்கு வரும்போது தன்னைத் தானே காப்பாற்றிக் கொள்ளும் சக்தியற்றதாக இருக்கிறது. மிருகங்களின் குட்டிகளுக்கு உள்ள ஒரளவு சக்தி கூட இதற்கில்லை. மிருகங்களின் குட்டிகள் பிறந்தவுடன் நடமாடுகின்றன. தாயிடம் பாலருந்தத் தாமே செல்லுகின்றன. ஆனால் மனிதக் குழந்தைக்கு இவை போன்ற திறமைகள் கூட இல்லை.

குழந்தை இவ்வாறு சக்தியற்ற நிலைமையிலிருந்து வளர வேண்டும். சூழ்நிலையை அனுசரித்து வாழக் குழந்தை சிறிது சிறிதாகத்தான் அறிந்து கொள்கின்றது.

கண் பார்வை, காது கேட்டல் முதலிய புலனறிவுகளும், உள்ளமும் பிறந்தது முதல் வேகமாக மலர ஆரம்பிக்கின்றன. உலகத்திலே தோன்றிய குழந்தையின் முதல் வேலை உடலிலும் உள்ளத்திலும் வளர்ச்சியடைவது. ஆதலால் இவ்விரு வகைப்பட்ட வளர்ச்சிக்கும் ஏற்ற வசதிகள் இருக்க வேண்டும்.

உடலும் உள்ளமும் வளர நல்ல சத்துள்ள உணவு, தூய்மையான காற்று, சூரிய ஒளி, தாராளமான நடமாட்டம், விளையாட்டு, போதுமான ஒய்வு, தூக்கம் என்ற இவையெல்லாம் அவசியம். இவற்றோடு மற்றொன்றும் மிக முக்கியமாகத் தேவை. அதுதான் அன்பும் அனுதாபமும் உள்ள அமைதியான சூழ்நிலை. இந்தச் சூழ்நிலையில்லாமல் முன்னால் கூறிய மற்றெல்லாம் இருந்தாலும் குழந்தையின் வளர்ச்சி திருப்திகரமாக நடைபெறாது.

உணவின் முக்கியத்தைப் பற்றி இன்று அதிகம் வற்புறுத்திக் கூற வேண்டியதில்லையென்று நினைக்கிறேன்.