பக்கம்:குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22

குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும்

யறியாமலே ஒரு திருப்தி ஏற்படுவதுண்டு. அதைப் போக்கிக் கொண்டு குழந்தை தானாகவே தனக்கு வேண்டிய சிறு சிறு காரியங்களைச் செய்துகொள்ள உற்சாகமளிக்க வேண்டும். அப்படிச் செய்தால்தான் குழந்தை தன்னம்பிக்கை பெற்று வாழ்க்கையில் வெற்றிபெற முடியும்.

சில பெற்றோர்கள் தங்கள் குழந்தை விரைவில் ஏதாவது ஒரு துறையில் மிகச் சிறந்து விளங்கவேண்டுமென்று ஆசைப்படுகிறார்கள். அந்த ஆசையால் அவர்கள் குழந்தையை அதன் இயல்புக்கும், சக்திக்கும், உள்ள வளர்ச்சிக்கும் அப்பாற்பட்ட காரியங்களைச் செய்யத் தூண்டுகிறார்கள். அப்படிச் செய்ய முயன்று குழந்தை தளர்ச்சியடைகின்றது. தனது முயற்சி கைகூடாமற் போவதால் தாழ்மை உணர்ச்சியும் பெறுகின்றது. அதனால் பிற்காலத்தில்கூட அக்காரியத்தில் வெற்றி பெறாமல் போக நேரிடும்.

இன்னும் சில பெற்றோர்கள் தங்களுக்குப் பிடித்தமான ஒரு துறையில் குழந்தை சிறப்படைய வேண்டுமென்று ஆசைப்படுவார்கள். குழந்தையின் இயல்பான திறமையை அவர்கள் கவனிப்பதில்லை. உதாரணமாக ஒரு சிறுவனுக்கு வைத்தியத் துறையில் இயல்பாகவே திறமை இருக்கலாம். அத்துறையில் முன்னேற்றமடைய அவனுக்கு ஊக்கமளித்தால் அவன் அதில் சிறந்து விளங்குவான். அப்படிச் செய்யாமல் அவனை ஒரு முதல்தர சங்கீத வித்வானாக்க வேண்டுமென்று விரும்பினால் அதில் வெற்றி கிடைக்காமல் போவதோடு, அவனுக்கு இயல்பாயமைந்துள்ள திறமையை விரிவடையச் செய்வதற்கும் சந்தர்ப்பமில்லாமற் போய்விடும். ஆதலின் இவற்றையெல்லாம் நன்கு கவனித்துச் சிறுவர்களை அவர்களுடைய இயல்பின் படி வளர நாம் உதவ வேண்டும்.

பொதுவாகத் தொகுத்துக் கூறுமிடத்து சிறுவர்கள் தங்களுடைய திறமைகளெல்லாம் பூரண மலர்ச்சிபெற்று