பக்கம்:குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
5. ஓடி விளையாடு பாப்பா

குழந்தை அங்கும் இங்கும் ஒடுகிறது. நீர்த் தொட்டியிலே கையை விட்டுத் தண்ணீரைச் சுற்றிலும் இறைக்கிறது ; மேலெல்லாம் நனைத்துக்கொள்கிறது; சொக்காயெல்லாம் ஒரே ஈரம். தண்ணீருக்குள்ளே கையை விட்டுச் சளசள வென்று அரவமுண்டாக்குவதிலும், நீரை நான்கு புறமும் தெறிக்கச் செய்வதிலும் குழந்தைக்கு அத்தனை பிரியம். தாய் ஓடி வந்து கவலையோடு பார்க்கிறாள். தண்ணீரிலே இப்படி அடிக்கடி நனைந்தால் குழந்தைக்குச் சளி பிடித்துக்கொள்ளுமே என்று அவளுக்குக் கவலை.

குழந்தையைக் கோபித்துக் கொள்ளுகிறாள். ஒரு நாளைக்கு எத்தனை தடவை உடையை மாற்றுகிறதென்று அவள் வேதனைப்படுகிறாள். குழந்தை அதற்காகக் கவலைப்படுகிறதில்லை. அடுத்த நிமிஷத்திலே அது மண்ணிலே விளையாடத் தொடங்கிவிடுகிறது. மாற்றி அணிந்த புதுச் சொக்காயில் மட்டுமல்ல, தலையிலும், உடம்பிலும் மண்ணைப் போட்டுக்கொள்ளுகிறது. தாய்க்குக் குழந்தையின் இந்தத் துடுக்குத்தனம் ஓயாத தொல்லையாக இருக்கிறது.

அதனால் குழந்தையை விளையாடுவதிலிருந்து தடுத்து விடலாமா? கூடவே கூடாது. விளையாட்டின் மூலம் குழந்தை எத்தனை அறிவையும், அனுபவத்தையும், அவயவங்களை உபயோகிப்பதில் பயிற்சியையும் பெறுகிறது என்பதை உணர்ந்தால் யாரும் குழந்தையின் விளையாட்டைத் தடுக்க நினேக்க மாட்டார்கள். விளையாட்டின் மூலம் குழந்தையின் மனமும் நன்கு மலர்ச்சியடைகிறது. மற்ற