பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14

கெடிலக்கரை நாகரிகம்


பூண்டி , அகரம், குடி, குறிச்சி, வேலி, பாடி, குப்பம், சாவடி, பட்டு, பட்டி, கோட்டம், கோட்டை , கிராமம், வலசு, மங்கலம், கோயில், பள்ளி, கரை, துறை, மலை, கானல், காடு, குளம், ஏரி, தோப்பு, நாடு, குடிசை, சத்திரம், சமுத்திரம் முதலிய பெயர்களால் நாம் அழைக்கிறோம். இதனை,

[1]“பாக்கம், பட்டினம், பதி, நகர், சும்மை,
பூக்கம், சேரி, புரம், முட்டம், பூண்டி,
அகரம், குடியே, குறிச்சி, கோசரம்,
அகலுள், நொச்சி, இருக்கை, வேலி,
குப்பம், பாடி, குறும்பு, பாழி,
சிறுகுடி, தண்ணடை, உறையுள், எயிலொடு,
வாழ்க்கை, உட்படுத்து இருபத் தேழும்
நாடில் ‘ஊர்’ என நவின்றிசி னோரே"

“பட்டும், நொச்சியும், பள்ளியும் சிற்றூர்”

முதலிய திவாகர நூற்பாக்களாலும், உலக வழக்குப் பெயர்களாலும் அறியலாம்.

இப் பெயர்கள் எல்லாவற்றிற்கும் பொதுவாக ‘ஊர்’ என்னும் பெயரே உலக வழக்கில் தலைமை தாங்குகிறது. நாம் புதியவர் ஒருவரைக் கண்டால், “உங்கள் ஊர் எந்த ஊர்?” என்று கேட்கிறோமே தவிர, ‘உங்கள் பட்டி எந்தப் பட்டி?’ என்றோ; ‘உங்கள் பாக்கம் எந்தப் பாக்கம்?’ என்றோ கேட்பதில்லை. கதை சொல்பவர்கள் கூட, ‘ஒரே ஓர் ஊரிலே’ என்று தொடங்குகிறார்களே யொழிய, ‘ஒரே ஒரு குப்பத்தில்’ என்றோ , ‘ஒரே ஒரு புரத்தில்’ என்றோ தொடங்குவதில்லை. ஓர் இடத்தைக் குறிப்பிடுவதானாலும், ‘மன்னார்குடி என்னும் ஊரிலே’ என்று குறிப்பிடுகிறார்களே யன்றி, ‘மன்னார்குடி என்னும் சேரியிலே’ என்றோ, ‘மன்னார்குடி என்னும் பாளையத்திலே’ என்றோ குறிப்பிடுவதில்லை. எனவே, ‘ஊர்’ என்னும் பெயர், மக்கள் குடியிருப்புக்களின் பொதுப் பெயர் என்பது புலனாகும், முற்கூறிய திவாகர நூற்பாவிலும்,

“பாக்கம், பட்டினம்.... இருபத் தேழும்
நாடில் ‘ஊர்’ என நவின்றிசி னோரே”

என, பாக்கம், பட்டினம் முதலிய இருபத்தேழும் ‘ஊர்’ என்னும் பொதுப் பெயராலேயே சுட்டப்பட்டுள்ளமை காண்க


  1. சேந்தன் திவாகரம் - இடப் பெயர்த் தொகுதி - நூற்பா : 88, 94.