பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

கெடிலக்கரை நாகரிகம்


தெய்வத் தன்மை

இவ்வாறு உழவு, வாணிகம், போக்குவரவு, குடிநீர் முதலிய பலமுனைத் திட்டங்களுக்குப் பயன்படுவதாலேயே ஆற்றங்கரைகளில் நகரங்கள் தோன்றி நாகரிகங்களை உருவாக்கின. ஆறுகள் தம் வளங்களால் மக்களை வளர்ப்பதனாலேயே, அவற்றைத் தெய்வத் தாயாக மதித்துப் போற்றி மக்கள் வழிபடுகின்றனர். கங்கையம்மா காவிரித் தாயே என்றெல்லாம் நம் மக்கள் அன்னையென அழைத்து வழிபட, ஆப்பிரிக்க ‘நைல்’ ஆற்றங்கரை மக்களோ, “எங்கள் அப்பன் நீலன்’ என்பதாக ஆற்றை அப்பன் என அழைத்துப் போற்றுகின்றனராம்.

தமக்கு வேண்டிய வளங்களை வள்ளலென வற்றாது வாரி வழங்கும் ஆறுகளைத் தெய்வத்தன்மை உடையனவாக மதித்த மக்கள், அவ்வாறுகளிலே நீராடுவதிலும் அவற்றின் கரைகளிலே திருக்கோயில் எடுத்து இறை வழிபாடு செய்வதிலும் பேரின்பம் கண்டதோடு, அச் செயல்களைப் பெரிய அறமாகவும் கருதினர். [1]‘ஆறில்லா ஊருக்கு அழகு பாழ்’ என்று ஒளவைப் பிராட்டி அருளிய அமிழ்த மொழியின் அருமை இப்போது புலனாகுமே!

இந்த அடிப்படையில் வைத்து நோக்குங்கால், தமிழகத்தில் - திருமுனைப்பாடி நாட்டில் ஒடும் ‘கெடிலம் ஆற்றின் பங்கும் மிகவும் விதந்து குறிப்பிடத்தக்கது.

ஆறும் அறத்தாறும்

‘ஆறு’ என்னும் சொல்லுக்கு உரிய பொருள்களை ஆராயின், தமிழ் மக்கள் ஆற்றின் பெருமையை எந்த அளவு உணர்ந்திருந்தனர் என்பது புலனாகும். ஆறு’ என்னும் பெயர்ச் சொல்லுக்கு, நதி, அறம், வழி, அறவழி, சமயம், பயன், பக்கம், இயல்பு, விதம், உபாயம், 6 என்னும் எண் முதலிய பொருள்களும்; ‘ஆறு (தல்) என்னும் வினைச் சொல்லுக்கு, தணிதல், மனநிறைவு பெறுதல், சூடு நீங்குதல், புண் காய்ந்து ஆறுதல், அடங்குதல், அமைதி பெறல் முதலிய பொருள்களும்; ‘ஆ(ற்)று (தல்) என்னும் பிறவினைச் சொல்லுக்கு, வலிமை பெறல், முடியக் கூடியதாதல், போதுமானதாதல், உய்தல், நடத்துதல், செலுத்துதல், வழிகாட்டுதல், தேடுதல், உதவி செய்தல், கூட்டுதல், பொறுத்துக் கொள்ளுதல், தாங்குதல், சுமத்தல், பசி பிணி முதலியன தணித்தல், தேற்றுதல், சூடு


  1. நல்வழி : 24.