பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆறுகளின் தோற்றமும் நீளமும்

29


பரப்பு 280 ஆயிரம் சதுர மைல்தான். நைலின் வடிநிலப் பரப்போ 1120 ஆயிரம் சதுர மைலாகும். அப்படியிருந்தும் அட்டவணையில் சிறிய பிரம்மபுத்திரா ஏழாவது இடத்தையும், பெரிய நைல், பதின்மூன்றாம் இடத்தையும் பெற்றிருப்பதற்குக் காரணம் என்னவென்றால், சிறிய பிரம்மபுத்திரா மிகுந்த அளவில் 620 ஆயிரம் க.அடி.செக, சராசரி ஒழுக்கும், பெரிய நைல் குறைந்த அளவில் 56 ஆயிரம் க.அடி. செ.க. சராசரி ஒழுக்கும் உடைமையேயாம்.

பதினான்கு ஆறுகளின் பெயர்களுமே, சராசரி ஒழுக்கின் அளவைப் பொறுத்தே முன் பின்னாக வரிசைப்படுத்தப் பட்டிருப்பதை அட்டவணையில் காணலாம். ஆனால், இது தொடர்பாக ஒரே ஒரு விதிவிலக்கு காணப்படுகிறது. முதலாவதாகக் குறிக்கப்பட்டுள்ள அமேசான் ஆற்றின் சராசரி ஒழுக்கு 3300 ஆயிரம் க.அடி செ.க. ஆகும். இரண்டாவதாகக் கூறப்பட்டுள்ள காங்கோ ஆற்றின் சராசரி ஒழுக்கோ 4300 ஆயிரம் க.அடி செ.க. ஆகும். அங்ஙனமெனில், சராசரி ஒழுக்கில் குறைந்த அமேசான் முதலாவதாகவும், சராசரி ஒழுக்கில் மிகுந்த காங்கோ இரண்டாவதாகவும் அட்டவணையில் அறிஞர்களால் அமைக்கப்பட்டிருப்பது ஏன்? காங்கோவைவிட அமேசான் சராசரி ஒழுக்கில் ஓரளவு குறைந்திருப்பினும், நீளம், பாய்ந்து பயன்படும் வடிநிலப் பரப்பு ஆகிய இரண்டிலே மிகவும் கூடுதலாக இருப்பதால் அமேசான் அட்டவணையில் முதலாவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகாறும் செய்த ஆராய்ச்சியின் முடிபாவது:- ஓர் ஆற்றை அதன் நீளத்தைக் கொண்டு மதிப்பிடக்கூடாது; மற்றத் தகுதிகளையும் உடன் கூட்டிப் பார்க்கவேண்டும் என்பதாம். இதனினும் இன்றியமையாத மற்றொரு கருத்தும் இங்கே ஆராய்ச்சிக்கு உரியது:

ஓர் ஆற்றின் நீளம், வடிநிலப்பரப்பு, சராசரி ஒழுக்கு ஆகியவற்றின் அளவுகள், ஒரு மாந்தனுடைய உயரம், பருமன், எடை ஆகியவற்றின் அளவுகளைப் போன்றனவாம். ஒருவரது தகுதியை, அவருடைய உயரம், பருமன், எடை ஆகிய உடல் பண்பைக் கொண்டு மதிப்பிடுவதில்லை. உடல் பண்பு இன்றியமையாததுதான் என்றாலும், அதற்கு மேல் சிறந்தனவாக உள்ளப் பண்பு, உயிர்ப் பண்பு என இரண்டு உள்ளன. இந்த இரண்டும் உடைமையே மக்கட் பண்பு ஆகும். இன்னும்