பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36

கெடிலக்கரை நாகரிகம்


அடிவாரத்திலே பெற்றுள்ள மையனூர் மலைப்பகுதியில் ஊறும் நீர் இறங்கி வருவதால் உருவானதே மையனூர் ஏரி. அந்த ஏரி மழையை மட்டும் நம்பியதாயிருந்திருந்தால் அந்த ஏரியிலிருந்து கோடைக் காலத்திலும் நீர் ஊறி ஆறாக ஓடமுடியாது. எனவே, கெடிலத்தின் முதலிடம் (மூலம்) மையனூர் ஏரியன்று, மையனூர் மலைப் பாறைச் சுனைப் பகுதியே. நதிமூலமும் ரிஷிமூலமும் அறிய முடியாது’ என்னும் முதுமொழி ஈண்டு ஒப்பு நோக்கற்பாலது.

கெடிலமும் வையையும்

கெடிலமும் வையையும் ஒரே நாட்டில் தோன்றி ஒரே நாட்டில் முடிவதில் ஒற்றுமை உடையவை; அதாவது, கெடிலம் திருமுனைப்பாடி நாட்டில் தோன்றித் திருமுனைப்பாடி நாட்டிலேயே கடலில் கலக்கிறது; வையை பாண்டிய நாட்டிலே தோன்றிப் பாண்டிய நாட்டிலேயே கடலில் கலக்கிறது. இஃதன்றி, இவ்விரண்டிற்கும் வேற்றுமையில் ஒற்றுமையும் உண்டு; அதாவது, கெடிலம் மையனூர் மலையடிவாரத்தில் தோன்றி மையனூர் ஏரியில் புகுந்து அவ்வேரியிலிருந்து ஆறாய் உருவெடுத்து வருகிறது. மதுரை மாவட்டத்தில் மேற்குமலைத் தொடர்ச்சியில் ஏலக்காய் மலை சார்ந்த ‘வருடநாடு’ பள்ளத்தாக்கில் தோன்றும் வையையாறு, இராமநாதபுரம் மாவட்டத்தில் இராமநாதபுரத்திற்குத் தென்கிழக்கே 18 கி.மீ. தொலைவிலுள்ள ‘பெரிய கண்மாய்’ என்னும் ஏரியில் போய் விழுந்து, பின்னர் அவ்வேரியிலிருந்து சென்று ‘பாக்’ கடற்காலில் (பாக் சலசந்தி) கலக்கிறது. கெடிலத்தின் தோற்றமும் வையையின் முடிவும் ஒற்றுமையாயிருக்கின்றன. அதாவது, கெடிலம் ஒர் ஏரியிலிருந்து தோன்றுவது போலவும், வையை ஒர் ஏரியில் முடிவது போலவும் தெரிகிறது. கெடிலத்தின் பிறப்பிடம் மையனூர் ஏரிதான் என்று சொல்வது போலவே, வையையின் முடிவிடம் பெரிய கண்மாய் ஏரிதான் என்று சொல்வதுண்டு மையனூர் மலைப்பகுதிக்கும் மையனூர் ஏரிக்கும் இடையேயும், பெரிய கண்மாய் ஏரிக்கும் பாக் கடற்காலுக்கும் இடையேயும் மழைக்காலத்தில் மட்டும் நீர்த்தொடர்பைக் காணமுடியுமாதலின் இவ்வாறு சொல்லப்படுகிறது. இவ்வாறாக, கெடிலம் பிறப்பிடத்தில் இல்லாவிடினும் முடிவிடத்திலாவது ‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்ற ஒருவகை முறையில் வையையை ஒத்திருப்பதையறியலாம்.