பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44

கெடிலக்கரை நாகரிகம்


ஆரியநத்தம், பாலக்கொல்லை முதலிய பல ஊர்ப் பக்கங்களிலிருந்து வரும் தண்ணீர் இந்த ஓடையாக உருவாகிறது. ஒரு சிற்றாறு போன்ற இந்தப் பெரிய ஓடையில் வெள்ளம் போகும் போது ஆண்டுதோறும் ஒரு சிலராவது அகப்பட்டு இறந்து விடுவதாகச் சொல்லப்படுகிறது.

அடுத்து, கடலூர் வட்டத்தில் பண்ணுருட்டிக்கு மேற்கே சேமக்கோட்டை, இலந்தைமேடு முதலிய ஊர்ப் பக்கத்திலிருந்து வரும் ‘இலந்தை மேட்டான் ஓடை’ என்னும் கால்வாய் கெடிலத்தின் வடகரையில் கலக்கிறது. மற்றும், திருவதிகைக்குத் தெற்கே 3 கி.மீ. தொலைவில் ஆண்டிக்குப்பம் என்னும் இடத்திலிருந்து ஒரு கால்வாய் வந்து திருவதிகைக்கு அண்மையில் கெடிலத்தின் தென்கரையில் கூடுகிறது.

அதற்கும் கிழக்கே - அதாவது கடலூருக்கு மேற்கே 16 கி.மீ. தொலைவில் ‘நடுவீரப்பட்டு வாய்க்கால்’ என்னும் ஒரு கால்வாய் வந்து கெடிலத்தின் தென்கரையில் சேர்கிறது. இது சேருமிடத்திற்குத் தெற்கே 4 கி.மீ. தொலைவிலுள்ள ஒரு மலைப்பாங்கில் ‘தேவமேடு’ என்னும் வற்றாத நீர் ஊற்று ஒன்று உள்ளது. அதிலிருந்து இந்தக் கால்வாய் தோன்றி, நடுவீரப்பட்டுக்கும் சென்னப்ப நாயக்கன் பாளையத்திற்கும் நடுவாக ஓடிவந்து அவ்வூர்கட்கருகில் கெடிலத்துடன் கூடுகிறது. இந்த நீரோட்டம் என்றும் வற்றுவதேயில்லை. பெருமழை பெய்யும்போது இதில் ஓடும் முழங்கால் அளவு தண்ணீரில்கூட யாரும் நடந்து கடந்து செல்ல முடியாது. மீறி நடந்தால், நடந்தவரை உருட்டிப் புரட்டியடித்து இழுத்துக் கொண்டு சென்று விடும். அவ்வளவு விரைந்து ஓடக்கூடியது இந்தக் கால்வாய். இது, தன்னைக் கடப்பதற்காக இரு கரைகளிலும் காத்திருப்பவர்களின் பொறுமையைச் சிறிது நேரம் பதம்பார்த்துவிட்டு உடனே அடங்கி விடும். அதாவது, மழை விட்டதும் கால்வாய்நீரும் அதன் வேகமும் மிகமிகக் குறைந்து விடும். மழையில்லாத கோடையில்கூட இக்கால்வாயில் சிறிதளவாவது இனிய தெளிவான ஊற்று நீர் ஓடிக்கொண்டிருப்பது, இந்தக் கால்வாய்க்கு மட்டுமின்றி, இதைக் கப்பமாகப் பெற்றுக்கொள்கின்ற கெடிலத்திற்கும் ஒரு பெருமையே.

இப்படியாக இன்னும் பல கால்வாய்கள் ஆங்காங்கே கெடிலத்தோடு வந்து சேர்கின்றன. துணைக்கால்வாய்கள் வந்து சேர்வது போலவே கிளைக்கால்வாய்களும் அணைகளிலிருந்து பிரிந்து பாசனத்திற்குப் பயன்படுகின்றன, தான் பெறுஞ்