பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கெடிலத்தின் பயணமும் துணைகளும்

45


செல்வங்களைப் பிறர்க்கு வாரி வாரி வழங்கிவிட வேண்டுமல்லவா? அணைகள் உள்ள இடங்களில் அணைகளின் மேல்புறத்திலிருந்து கால்வாய்கள் பிரிவதன்றி, அணை இல்லாத சில இடங்களிலும் ஆற்றிலிருந்து கால்வாய்கள் பிரிக்கப்பட்டுப் பாசன வசதி செய்கின்றன. எடுத்துக்காட்டாக, ‘தாழனோடை’ அல்லது ‘சேஷநதி’ என்று சொல்லப்படும் துணையாறு கெடிலத்தோடு கலக்கும் இடத்திற்குக் கிழக்கே சிறிது தொலைவில் கெடிலத்தின் தென்கரையில் ‘சேந்தமங்கலத்தான் ஓடை’ என்னும் பெயரில் ஒரு கால்வாய் பிரிந்து, சேந்தமங்கலம், அதற்கும் தென் கிழக்கே 4 கி.மீ. தொலைவிலுள்ள சேந்த நாடு முதலிய ஊர்களில் சென்று பாய்கிறது.

மையனூர் ஏரியிலிருந்து தோன்றுகிற கெடிலம் - வழியில் பல ஏரிகளிலிருந்து தோன்றும் துணைக் கால்வாய்களைப் பெற்று வரும் கெடிலம், தானும் தன் கிளைக்கால்வாய்களின் வழியாகச் சில ஏரிகளை நிரப்புகிறது. எடுத்துக் காட்டாக, கடலூர் நகராட்சியின் தென்மேற்கு மூலையில் - புருகேசுபேட்டை என்னும் ஊர் எல்லையில் - கேப்பர் மலையின் அடியில் உள்ள ‘கொண்டங்கி’ என்னும் ஏரி கெடிலத்தின் கிளைக்கால்வாயால் நிரப்பப்படுகிறது, மூன்று பக்கம் மலை சூழ்ந்த இந்த ஏரிக்கரையில் நின்று மெல்லிய காற்றுடன் இயற்கைக் காட்சிகளை நுகர்வது கண்ணுக்குத் தெவிட்டாத பெருவிருந்து!

இப்படியாகக் கெடிலம், தன் பயணத்திடையே போக்கும் வரவும் புணர்வும் உடையதாய்த் திகழ்கிறது.