பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
முன்னுரை

கெடிலக்கரையில் பிறந்து வளர்ந்து வாழ்ந்து பழகிய யான், கெடிலக்கரை நாடு பற்றிப் பல்லாண்டுகள் நேரில் பார்த்துப் பட்டறிந்த செய்திகளையும் நூல்களில் படித்தறிந்த செய்திகளையும் தக்கார்வாய்க் கேட்டறிந்த செய்திகளையும் திரட்டி, தேவையான இடங்களில் எனக்குத் தோன்றிய சில ஆராய்ச்சி முடிபுகளையும் இணைத்து, ‘கெடிலக்கரை நாகரிகம்’ என்னும் பெயரில் ஒரு பெரிய, புதிய ஆராய்ச்சித் தொகுப்பு நூல் வடிவில் தருகிறேன். உலகில் எகிப்திய நாகரிகம், மெசபட்டோமிய நாகரிகம், சிந்துவெளி நாகரிகம் முதலியனவாக எத்தனையோ வகை நாகரிகங்கள் பேசப்படுகின்றன. அவையெல்லாம் பழங்காலத்தில் இருந்து மறைந்துபோனவை. அவற்றினும் வேறுபட்டது கெடிலக்கரை நாகரிகம்.

கெடிலக்கரை நாட்டில் அன்றுதொட்டு இன்றுவரை நாகரிகம் படிப்படியாய் வளர்ந்து முதிர்ந்து நின்று நிலைத்து நிறைவு பெற்றுள்ளநிலை இந்நூலில் பல கோணங்களில் விளக்கப்பட்டுள்ளது. ‘கெடிலக்கரை நாகரிகம்’ இன்னது என்னும் செய்தி இந்நூலின் இறுதிப் பகுதியில் முடிவுரையாய்த் தரப்பட்டிருப்பினும், இந்நூல் முழுவதிலும் உள்ள செய்திகள் கெடிலக்கரை நாகரிகத்தின் விளக்கங்களேயாம். கெடிலக்கரை பற்றிய விவரங்கள் அனைத்தும் அறிந்து கொண்டாலே, ‘கெடிலக்கரை நாகரிகம் இத்தகையது’ என்ற முடிவு தானே கிடைத்து விடுமன்றோ?

இந் நூலில், கெடிலக்கரை நாகரிகத்தைத் தெரிந்துகொள்ள உதவும் தொல்பொருள்கள், கல்வெட்டுகள், இலக்கியங்கள். கலைகள், பழக்க வழக்கப் பண்பாடுகள், வரலாற்றுக் குறிப்புகள் முதலிய உறுதுணைகள் போதிய அளவு எடுத்துக்காட்டி விளக்கப் பெற்றுள்ளன. இவற்றின் தொகுப்பே இந்நூல் எனவும் கூறலாம்.