பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வரலாற்றுக் காலத்துக்கு முந்திய காலந்தொட்டு இன்றுவரையிலும் நிகழ்ந்த பல்வேறு செய்திகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.

எகிப்திய நாகரிகம், சிந்துவெளி நாகரிகம் போன்ற நாகரிகங்களைப் பற்றிக் கேட்டும் படித்தும் பழகியவர்கள், கெடிலக்கரை நாகரிகம் என்றதும். ‘இந்த நாகரிகம் எங்கே, எப்போது, யாரால் அகழ்ந்து கண்டுபிடிக்கப்பட்டது?’ என வினவக்கூடும். மண்ணுக்குள் புதையுண்டு மறைந்துபோன நாகரிகங்களை யல்லவா அகழ்ந்து காணவேண்டும்?

நாகரிகம் என்ற சொல்லுக்கு ‘மறைந்து போனது’ அல்லது ‘அகழ்ந்து கண்டுபிடிக்க வேண்டியது’ என்பதாக எந்த அகராதியிலும் பொருள் இல்லையே. மேலும், எல்லா நாகரிகங்களுமே மண்ணுக்குள் புதைந்து மறைந்து அகழ்ந்து கண்டுபிடிக்க வேண்டிய நிலையில் இல்லையே! பழைய நாகரிகங்கள் பல மறையாமல், மேலும் மேலும் வளர்ச்சி பெற்றுள்ளன; அவற்றுள் ஒன்றே கெடிலக்கரை நாகரிகம்.

மண்ணுள் மறைந்துபோன இடங்களின் நாகரிகங்களை வெளிப்படுத்தி உலகிற்கு விளம்பரப்படுத்துவது போலவே, மண்ணுள் மறையாது வளர்ச்சி பெற்றிருந்தும், பல்வேறு சூழ்நிலைகளால் வெளியுலகிற்குத் தெரியாதபடி மறைந்திருக்கும் இடங்களின் நாகரிகங்களையும் உலகுக்கு அறிமுகப்படுத்த வேண்டுவது இன்றியமையாக் கடனாகும். அவ்வாறு உலகினர்க்கு அறிமுகம் செய்தற்கு உரிய நாகரிகங்களுள் கெடிலக்கரை நாகரிகமும் ஒன்று.

உலகினர் ஒருபுறம் இருக்க, இந்தியர்களும்-குறிப்பாகத் தமிழருள் பலரும் இன்னும் கெடிலக்கரை பற்றி அறியாதவராயுள்ளனர். இந்த நூல், சிறப்பாகக் கெடிலக்கரை நாகரிகத்தைத் தமிழர் அனைவர்க்கும் அறிவிப்பதோடு இதன் வாயிலாக, பொதுவாகத் தமிழர் நாகரிகத்தை இந்தியர்க்கும்