பக்கம்:சங்ககாலத் தமிழ் மக்கள்-3.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழகம்

23


"துளங்குகுடி திருத்திய வலம்படு வென்றி” (பதிற். 37)

எனவும்,

“பகைவர் கெடுகுடி பயிற்றிய கொற்றம்” (பதிற். 69)

எனவும் புலவர் பெருமக்கள் சிறப்பித்துள்ளார்கள். இவ்வாறு நாட்டு மக்களின் விருப்பத்தை நன்குணர்ந்து, அவர்களுக்கு வேண்டும் அறிவும் ஆற்றலும் படைப்பயிற்சியுந் தந்து ஆட்சி புரியும் செவ்விய முறை பண்டைத் தமிழ் மன்னர் பால் நிலைபெற்றிருந்ததனால், மக்கள் அவ்வேந்தர்களது ஆணையின்கீழ் அடங்கி வாழ்தலையே தங்களுக்குரிய பெரும்பேறாகக் கருதி மகிழ்ந்தார்கள்.

“குடிதழி இக் கோலோச்சும் மாநில மன்னன்
அடிதழீஇ நிற்கும் உலகு.”

என வருந் திருவள்ளுவர் வாய் மொழி தமிழ் நாட்டு அர சியலில் நிலைபெற்ற நற்பயனை விளக்குவதாயிற்று.

வடபுலத்தில் வாழ்ந்த ஆரிய மன்னர், தமிழ் வேந்தர்களின் பேராற்றலையும், போரென்றால் விரும்பிச் செல்லும் தமிழ் வீரர்களின் ஊக்கத்தினையுங் கண்டு, தமிழர் சேனை தம் நாட்டின்மேல் வருதலும் கூடும் எனக்கருதி உறக்கமின்றி வருந்துவாராயினர் [1].

வட நாட்டில் நிகழ்ந்த திருமண விருந்தொன்றிற் கலந்துகொண்ட கனகன், விசயன் என்னும் ஆரிய மன்னர் இருவரும் இமயம் வரை படையெடுத்துச் சென்று வெற்றி கொண்ட தமிழ் மூவேந்தர்களின் வன்மையினை


  1. ........................ ‘அலம் வந்து
    நெஞ்சம்நடுங்கு அவலம் பாயத்
    துஞ்சாக் கண்ண வடபுலத் தரசே.’
    -புறம், 31.