பக்கம்:சங்ககாலத் தமிழ் மக்கள்-3.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26

சங்ககாலத் தமிழ் மக்கள்



செயலும் உடைய மக்களைப் பல்வேறு சாதியினராகப் பிரித்து வேறுபாடு கற்பிக்கும் இருநிலை, சங்ககாலத் தமிழரிடையே காணப்படாததொன்றாம. ‘மக்கள் செய்யுங் தொழில் வேற்றுமை காரணமாகவே அவர்களிடையே உயர்வு தாழ்வுகள் உண்டாகும்’, என்பது தமிழர் துணிபு.

தமிழ் மக்களுடைய பழைய இலக்கண நூலாய் விளங்குவது தொல்காப்பியம். அந்நூல் மக்கள் வாழ்க்கையினை ‘அகம், புறம்’ என இருவகையாகப் பகுத்து விளக்குகின்றது. ஒத்த அன்புடைய கணவனும் மனைவியும் கலந்து வாழும் குடும்பவாழ்வினை அகவாழ்வென்றும், இங்ங்ணம் பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் ஒன்றி வாழ்தற்குரிய அரசியல் வாழ்வினைப் புறவாழ்வென்றும் வகுத்துரைத்தல் தமிழர் மரபாகும்.

‘அறம், பொருள், இன்பம்’ என்னும் இம்மூன்று பொருள்களையும் ‘மும்முதற்பொருள்’ எனத் தமிழர் பாராட்டிப் போற்றுவர். எல்லாவுயிர்களாலும் விரும்பப்படுவது இன்பம். அவ்வின்பத்திற்குக் காரணமாக மக்களால் ஈட்டப் பெறுவது பொருள்; நடுவு நிலையில் நின்று அப்பொருளையீட்டுதற்குரிய ஒழுங்கு முறை அறம். அறத்தினாற் பொருள் செய்து அப்பொருளால் இன்பம் நுகர்தல் மக்கள் வாழ்க்கை முறையாகும். இம்முறையினை ஆசிரியர் திருவள்ளுவனார் அறத்துப் பால், பொருட்பால், இன்பத்துப் பால் என முப்பால்களாக வகுத்து விளக்குகின்றார்.

அகவொழுக்கத்தை ஐந்திணை, கைக்கிளை, பெருந்திணை என ஏழு வகையாக விரித்து விளக்குவர். ஒத்த அன்புடைய ஒருவனும் ஒருத்தியுமாகிய காதலர் இருவர், இல்லிருந்து நல்லறஞ்செய்தற்கு இன்றியமையாக அன்பின் வழிப்பட்ட உள்ளத்துணர்ச்சியே ஐந்திணை எனப்-