பக்கம்:சங்ககாலத் தமிழ் மக்கள்-3.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழர் வாழ்வியல்

27

படும். தலைவன் தலைவி என்னுமிருவரும் தம்முட்கூடி மகிழ்தலும், உலகியற்கடமை நோக்கித் தலைவன் சில நாள் தலைவியைப் பிரிந்து செல்லுதலும், பிரிந்த தலைவன் குறித்த நாளளவும் தலைவி அப்பிரிவுத்துன்பத்தைப் பொறுத்து ஆற்றியிருத்தலும், கணவன் குறித்த நாளில் வரத் தாமதிப்பின் ஆற்றாமை மிக்கு மனைவி இரங்குதலும், பின் அவன் வந்த போது அன்பினாற் பிணங்குதலும் என ஐந்து பகுதியாக இவ்வகத்திணையினை விரித்துரைப்பர். இவ்வைந்து ஒழுகலாறுகளையும் முறையே குறிஞ்சி, பாலை, முல்லை, நெய்தல், மருதம் எனப் பெயரிட்டு வழங்குவர்.

மேற்கூறிய அன்பினைந்திணையாகிய அகவொழுக்கம் ‘களவு, கற்பு’ என இரு வகைப்படும். உருவும் திருவும் உணர்வும் முதலியவற்றால் ஒத்து விளங்கும் தலைவனும் தலைவியும் நல்லூழின் செயலால் தாமே எதிர்ப்பட்டு, அன்பினால் ஒருவரையொருவர் இன்றியமையாதவராய், உலகத்தார் அறியாது மறைந்தொழுகுதல் களவாகும். ‘மறைவில் நிகழும் ஒழுகலாறு’ என்ற கருத்திலேயே ‘களவு’ என்னும் சொல் வழங்குகின்றது. இங்ஙனம் மறைந்தொழுகுதலைத் தவிர்ந்து, பெற்றோர் உடன்பாடு பெற்று, இருவரும் உலகத்தார் அறிய மணஞ்செய்து கொண்டு மனையறஞ்செய்தலே ‘கற்பு’ எனப்படும்.

கணவன் மனைவி என்னும் இருவருள் ஒருவர் மட்டும் அன்பினாற்கூடி வாழ்தலில் விருப்புடையராக, மற்றவர் அவர் உறவில் விருப்பின்றி ஒழுகுவது கைக்கிளையாகும். கைக்கிளையென்பது, ஒருதலைக்காமம். ஒருவனும் ஒருத்தியும், தம்முள் அன்பில்லாதவராய் இருந்தும், கணவனும் மனைவியுமெனப் பிறராற்பிணக்கப்பட்டு, அன்பின்றிக் குடும்பம் நடத்துதல் பெருக்திணையாகும். இவ்வாறு