பக்கம்:சங்ககாலத் தமிழ் மக்கள்-3.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28

சங்ககாலத் தமிழ் மக்கள்

பொருத்தமில்லாத உறவு உலகியலிற்பெரும்பான்மையாகக் காணப்படுதலான், இதனைப் பெருந்திணை என்ற பெயரால் வழங்குவாராயினர்.

பொன்னும் பொருளும் பிறவளங்களும் ஆகியவற்றை விரும்பி ஒருவரையொருவர் மணத்தற்கு ஒருப்படுதல் பொது மக்களின் இயல்பாகும். மணற்கேணியினைத் தோண்டத் தோண்ட நீர் ஊறுவது போலக் கணவனும் மனைவியும் எனப் பன்னாள் பழகப் பழகச் சிறப்புடைய அன்பு தோன்றிப் பெருகுதல் இப்பொது வாழ்வின் பயனாகும். கணவனும் மனைவியுமாகப் பல பிறவிகளிலும் ஒன்றி வாழ்ந்தமையால் நிரம்பிய அன்புடையாரிருவர், மீண்டும் பிறந்து வளர்ந்து, நல்லூழின் செயலால் ஓரிடத்து எதிர்ப்படுவராயின், அன்பினால் நிறைந்த அவ்விருவடைய நெஞ்சமும் செம்மண் நிலத்திற்பெய்த மழை நீரைப் போலக் கலந்து ஒன்றாகும் இயல்புடையனவாம். ஒருவரையொருவர் முன் கண்டு பழகாத நிலையிலும் அவர்கள் உள்ளத்திற் பண்டைப் பிறப்பிற்பெருகித் தேங்கியிருந்த அன்பு வெள்ளம், அவ்விருவரும் ஒருவரையொருவர் கண்ட அளவிலேயே நாணமும் நிறையுமாகிய அணைகளைக் கடந்து, நிலமும் குலமுமாகிய தடைகளை அழித்து ஒன்றாகும் இயல்பே இயற்கைப் புணர்ச்சி எனத் தமிழ் மக்களாற் சிறப்பித்து உரைக்கப்படுவதாம். இவ்வாறு முதற்காட்சியிலேயே அன்பின் தொடர்புணர்ந்து, ஒருவரையொருவர் இன்றியமையாதொழுகும் இயல்புடையாரை நல்வாழ்விற்சிறந்த தலைமக்கள் எனத் தமிழ் மக்கள் பாராட்டிப் போற்றினார்கள். இத்தகைய தலைமக்களது ஒழுகலாறே சங்க இலக்கியங்களில் விரிவாக விளக்கப் பெறுகின்றது.