பக்கம்:சங்ககாலத் தமிழ் மக்கள்-3.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழர் வாழ்வியல்

31

மதிக்கப் பெற்றனர். நல்வினையினது நன்மையும் தீவினையினது தீமையும் இல்லையென்று கருதித் தம் மனம் போனபடி முறை பிறழ்ந்து நடக்கும் சிற்றினத்தாரைத் தம் ஆட்சிக் குழுவினின்றும் விலக்கினர் : நம் நாட்டிற்கெனப் போர்க்களத்தில் உயிர் வழங்குமியல்பினராகிய படை வீரர்களை வறுமையகற்றித் தம்மைப்போலப் பரிசிலர்க்கு வழங்கும் வண்மையுடையவராகப் பெரும் பொருள் தந்த ஆதரித்தனர். அதனால், அவ்வீரர்கள் போர் என்று கேட்பின் பகைவர் நாடுகள் எவ்வளவு தூரமாயிருந்தாலும் விரைந்து சென்று போரில் வெற்றி தந்தார்கள். போரில்லாது சும்மா இருத்தலில் வெறுப்படைந்த வீரர்கள், ‘எங்கள் வேந்தன் எங்களைப் போருக்கு எவாதிருத்தலால் யாங்கள் எங்களுக்குள்ளேயே போர் செய்து சாவேம்!’ எனக் கருதி நண்புடையர்களாகிய தங்களுள்ளே போர் செய்ய எண்ணுதலும் உண்டு. இவ்வாறு போரில் விருப்பமுடைய படைவீரர்களையுடைய தமிழரசர்கள் தாங்கள் எண்ணியபடியே தங்கள் நாட்டை வளம்படுத்தி உருவாக்கும் ஆற்றல் பெற்று விளங்கினார்கள். பெரு வெள்ளத்தால் உண்டாகும் பூசல் அல்லது மக்கள் ஐயோ என முறையிடும் பூசல்-நேராதபடி தம் நாட்டு மக்கள் அமைதியாக வாழும் வண்ணம் முறை செய்தார்கள். புலி தன் குட்டியைப் பாதுகாப்பதுபோல வேந்தர்களும் தங்கள் குடிமக்களைப் போற்றிப் பாதுகாத்தார்கள். ‘கொல்லுந் தன்மையுடைய யானைகளும், மனஞ் செருக்குற்ற குதிரைகளும், நெடுங்கொடியுடைய பெரிய தேர்களும், உள்ளத் திண்மை படைத்த போர் வீரர்களும் எனும் நாற் பெரும்படைகளால் வேந்தர் சிறப்புற்றிருப்பினும், அறநெறியை முதலாகக் கொண்டு நிகழ்வதே அரசரது வெற்றி யாகும்’, என்ற கருத்தினைப் புலவர்கள் வேந்தர்க்கு அறி-