பக்கம்:சங்ககாலத் தமிழ் மக்கள்-3.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழர் வாழ்வியல்

41

மக்களுக்குப் போர்ப் பயிற்சி தந்து அவர்களைப் படை வீரர்களாக்கி வெற்றி கொண்டார்களென்பதைப் பதிற்றுப் பத்து என்னும் நூலால் அறியலாம்.

நுகர்தற்குரிய பொருளில்லாமை வறுமையாகும். இவ்வறுமையின் விளைவாக நாட்டிற் பசியும் பிணியும் தோன்றி மக்களை வருத்துவனவாம். பசியினால் விளையும் துன்பத்தினையும் அப்பசிப் பிணியைத் தணித்தற்குரிய வழிதுறைகளையும் தமிழறிஞர்கள் இடைவிடாதாராய்ந்து, பசிப்பிணியை நீக்குதற்குரிய வழி துறைகளை வகுத்துக் கூறியுள்ளார்கள். நற்குடிப் பிறப்பினையும், நல்லொழுக்கத்தாற்பெறும் சிறப்பினையும், கல்வியறிவினையும், பழி பாவங்களுக்கு அஞ்சுதலாகிய நாணத்தினையும், உடம்பின் அழகினையும் சிதைத்தழிப்பது பசி நோயாகும். இவ்வாறு மக்களுடைய உணர்வொழுக்கங்கள் எல்லாவற்றையும் அழித்தல் இப்பசியின் இயல்பாதலின், இஃது ‘அழிபசி’ எனப்பட்டது. இப்பசித் துன்பம் நாட்டில் தோன்றாத படி காத்தல், அரசியலின் முதற்கடமையாகும். மிக்க பசியினால் உடலிற் பிணியும் உள்ளத்திற் பகைமை உணர்ச்சியும் தோன்றுதலியல்பு. பசியும் பிணியும் பகையும் நீங்கி, மக்களெல்லாரும் அன்பினாற்கூடி வாழ்வதற்கேற்ற வளமுடைமையே ஒரு நாட்டின் சிறப்பியல்பாகும். உணவினை நிறைய விளைவிக்கும் ஆற்றல் பெற்றார் உழவராவர். வாழ்க்கைக்கு வேண்டும் ஏனைய பொருள்களெல்லாவற்றையும் இயற்றித் தர வல்லவர் தொழிலாளராவர். தம் முயற்சியால் தம் நாட்டிலுள்ள பொருளைப் பிற நாட்டிற்கு அனுப்பியும், பிற நாட்டிலுள்ளவற்றைத் தம் நாட்டிற் கொண்டு வந்தும், கடல் வழியாகவும் தரைவழியாகவும் வாணிகஞ்செய்து பொருளீட்டுவார் வணிகர்.