பக்கம்:சங்ககாலத் தமிழ் மக்கள்-3.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
சங்ககாலத் தமிழ் மக்கள்

தோற்றுவாய்

தமிழ் வளர்ச்சியிற் பேரார்வமுடைய பாண்டிய மன்னர்கள் தலைச்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என்னும் மூன்று சங்கங்களை நிறுவிக் கல்விப் பணி புரிந்த காலம் 'சங்க காலம்’ என வழங்கப்பெறும். அக்காலப் பகுதி இற்றைக்கு ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும். மக்கள் தங்கள் தாய்மொழி வழியாக எல்லாக் கலைகளையும் வளர்க்க எண்ணி, அரசியல் ஆதரவிற் புலவர் பேரவையைக் கூட்டி அறிவினைப் பரப்பும் முறை நாகரிக வளர்ச்சிக்கு இன்றியமையாததாகும். இத்தகைய புலமைத் தொண்டினை நம் தமிழ் முன்னேர்கள் பல்லாயிர ஆண்டுகளுக்கு முன்னரே மேற்கொண்டிருந்தார்கள். அவர்களாற்போற்றப்பெற்று வளர்ந்த முச்சங்கங்களின் வரலாறு, இறையனர் களவியலுரையிலும், சிலப்பதிகார அடியார்க்கு நல்லாருரையிலும் விளக்கப் பெறுகின்றது.

நுண்ணறிவுடைய புலவர் பலரும் தமக்குள் மாறுபாடில்லாமல் ஒருங்குகூடித் தமிழாராய்ந்த புலவர் பேரவையே சங்கம் என வழங்கப் பெறுவதாகும். இதனை முன்னுள்ளோர் ‘கூடல்’[1] என்ற பெயரால் வழங்கினார்கள். மாங்-


  1. ‘தமிழ்கெழு கூடல் தண்கோல் வேந்தே’
    —புறம். 58 : 13

    உயர்மதிற் கூடலின் ஆய்ந்தஒண் உந்தமிழ்

    —திருக்கோவையார்