பக்கம்:சிந்தனையாளன் மாக்கியவெல்லி.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28

இருந்து அதனுடைய குழப்பங்கள் உண்டாகின்றன. ஏனெனில் மக்கள் தாங்கள் மேலும் நன்றாக வாழமுடியும் என்ற நம்பிக்கையில் தங்கள் எஜமானர்களை தாங்களே விரும்பி மாற்றிக் கொள்கிறார்கள். இந்த நம்பிக்கையில் தான் மக்கள் தங்கள் அரசர்களை எதிர்த்துப் படை திரட்டுகிறார்கள். ஆனால் அவர்கள் ஏமாற்றம் அடைந்து ஏற்கனவே இருந்ததைக் காட்டிலும் மோசமான ஆட்சியைப் பெறுகிறார்கள்.

இம்மாதிரியான அரசை ஏற்றுக்கொள்ளுகின்ற அரசனுக்கு இரண்டு வகையிலும் கெடுதல் ஏற்படுகிறது. அந்த ராஜ்யத்தை அடைவதில் யாராரைப் புண்படுத்தினானோ அவர்களையெல்லாம் பகைவர்களாக்கிக் கொள்கிறான். அவன் அதை அடைவதற்கு உதவி புரிந்தவர்களையும் திருப்திப்படுத்த முடியாமல் அவர்களுடைய நட்பை இழக்கிறான். அவர்களுடைய தயவு வேண்டியிருப்பதால் அவர்களிடம் கடுமையாகவும் நடந்து கொள்ளவும் முடியாது. தன்னை மனமுவந்து வரவேற்ற அவர்களாலேயே வெறுக்கப்படுபவனாகவும் ஆகி விடுகிறான்.

கலகப் பிரதேசங்களைத் திரும்பவும் தன் ஆட்சிக்கு உட்படுத்திய அரசன் மீண்டும் அவற்றை எளிதாக இழந்து விடுவதில்லை என்பது உண்மைதான். ஏனெனில் கலகத்திற்குக் காரணமானவர்களைக் கண்டுபிடித்தும், சந்தேகத்திற்குரியவர்களை வெளிப்படுத்தியும், குற்றவாளிகளைத் தண்டித்தும், தன் நிலையைப் பாதுகாத்துக் கொள்ளவும், தனக்குப் பலவீனமாக உள்ள இடங்களை வலுப்படுத்திக் கொள்ளவும் அந்த அரசனுக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது.

ஏற்கனவே நிலை பெற்றிருக்கிற ஓர் ராஜ்யத்தோடு சேர்ந்திருக்கக் கூடிய ராஜ்யங்கள் ஒரே மக்களினத்தையும், ஒரே மொழியையும் கொண்டனவாக இருக்கலாம். அல்லது இல்லாமல் இருக்கலாம். அவை ஒரே மொழியும், ஒரே இனமும், நடமாடும் ராஜ்யங்களாக இருந்தால், அதிலும் சுதந்திர வாசனையே தலை காட்டாத இடங்களாக இருந்தால் அவற்றை வசப்படுத்திக் கொள்வது மிக எளிது. அந்த ராஜ்யங்களை அரசாண்ட ராஜ குடும்பத்தினர் அடியோடு ஒழிந்து போயிருந்தால் மிகவும் நல்லது. அவர்களுடைய பழைய நிலைமைக்கும் பழக்க வழக்கங்களுக்கும் குந்தகம் ஏற்படாமல் பார்த்துக் கொண்டால் அந்த மக்கள் தங்கள்