பக்கம்:சிந்தனையாளன் மாக்கியவெல்லி.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

33

இருக்கின்றன. முதலாவது வழி, அவற்றைக் கொள்ளையடித்து விடுவது. இரண்டாவது வழி, அரசனே அந்த ராஜ்யத்தில் தங்கி வாழ்வது. மூன்றாவது வழி, அரசனிடம் நட்புப் பாராட்டக் கூடிய சிலரைக் கொண்டு ஓர் ஆட்சிக் குழுவை ஏற்படுத்தி அவர்களைத் தங்கள் சொந்த நீதி முறைகளின்படி வாழவிட்டு, அவர்களிடமிருந்து கப்பம் பெற்றுக் கொள்வது. இந்த அரசாங்கம், அரசனால் ஏற்படுத்தப்பட்டதாகையால் அது அவனிடம் நட்புப் பாராட்டாமலும், அவனுடைய பாதுகாப்பைப் பெறாமலும் வாழ முடியாது. ஆகவே அந்த நட்பை நிலை நிறுத்த அது எல்லா வகையாலும் பாடுபடும்.

இந்த வழியில் வெற்றிபெற வாய்ப்பில்லாவிட்டால் முதலாவது வழியைக் கடைப்பிடிக்க வேண்டியதுதான். ஒரு சுதந்திரமான நகர ராஜ்யத்திற்கு அரசனாக வருபவன் அதை அழிக்காவிட்டால், அதனால் தான் அழிக்கப்படுவதை எதிர்பார்க்க வேண்டியது தான்.

இடையில் செலவழித்த காலத்தையோ, அரசனால் பெற்ற பலன்களையோ எண்ணிப் பாராமல், பழம் பெருமைகளையும், சுதந்திரத்தின் அருமைகளையும் முன்னிட்டே எப்போதும் கலகம் ஏற்படலாம். அங்கு வாழ்பவர்கள் பிரிக்கப் படாமல் அல்லது கலைக்கப்படாமல் ஒன்று சேர்ந்திருக்கும் வரையிலே தங்கள் பழமையையும் பெருமையையும் மறக்கவே மாட்டார்கள். ஆனால், ஓர் அரசனின் கீழ் வாழ்ந்தவர்களாக அந்தக் குடிமக்கள் இருந்தால், தங்கள் ராஜகுடும்பம் அழிந்து போய் விட்டால், கீழ்ப்படிந்தே பழக்கப் பட்டமையாலும் தங்களை ஒன்று சேர்க்கும் உணர்ச்சியைத் தூண்டக்கூடிய ராஜவமிசத்தினர் யாரும் இல்லாமையாலும், சுதந்திரமாக வாழ்ந்து பழக்கமில்லாததாலும் புதிய அரசன் அவர்களுடைய மனப்பான்மையை எளிதாகத் தன் வசப்படுத்தி விடலாம். ஆனால் குடியரசுகளில் உயிர்ப்பும், வெறுப்பும், பழிவாங்கும் துடிப்பும் மிக அதிகமாக இருக்கும். அவர்கள் தங்கள் முந்திய சுதந்திர வாழ்வின் நினைப்பை மறக்கவே மாட்டார்கள். ஆகவே, அவர்களுடைய ராஜ்யத்தை நிலையாக ஆளுவதற்குரிய வழி அவர்களுடைய நகரங்களைப் பாழடித்து விடுவதுதான் அல்லது அரசனே அந்த ராஜ்யத்தில் சென்று குடியிருப்பதுதான்!