பக்கம்:சிரிப்பதிகாரம்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எஸ்.டி. சுந்தரம்

13


– கடனா! திருமணமா? மறுமணமா? வரதட்சணையா? வராத தட்சணையா? அது கரும் பணமா? வெறும் பணமா? என்ற பொருள் பற்றி, ஒட்டியும் வெட்டியும் பேசும் ஒரு பட்டி மன்றம் இன்னும் துவக்கப்படவில்லை. திருமண வீடுகளில் பட்டிமன்றம் நடத்தப்போகும் பெரியோர்களுக்கு ஒரு விண்ணப்பம். இனி திருமணங்களில் மேற்கண்ட பொருள்களைப் பற்றிப் பெரும்புலவர்களின் பட்டிமன்றங்கள் முழங்க வேண்டும். அப்படி முழங்கினால் இல்லறத்தை ஏற்கும் இளந்தம்பதிகளுக்குப் பட்டிமன்றம் நல்ல பல பாடங்களைச் சொல்லிக் கொடுக்கும். அறம், பொருள், இன்பங்களை வாரி வாரி வழங்கும்.

கலியாண வீடு ஆகையால் நவரசச் சுவையோடு கொஞ்சம் நகைச்சுவையும் ததும்பும் வண்ணம், பட்டிமன்றம் அமைய வேண்டும். அழுது வடியும் அவலச் சுவைகள் அதிகம் இருத்தலாகாது. அதற்குப் பதிலாகப் பெரும் பேச்சுப் புலிகள் நிறைய முன்வர வேண்டும். அத்தகைய பேச்சுப் புலிகளில் மிகச் சிறந்தவர்கள், இந்தப் பேனா சித்திரத்தில் வருகிறார்கள். உயர்திருவாளர்கள் சிரிப்பானந்த அடிகளும், வெறுப்பானந்த வெடிகளும், இட்லர் - பட்லர் - பேபி ராணி - சாதுவன் சாம்பிராணி, கற்பூரம், கண்றாவி கந்தருவன் முதலிய பாத்திரங்கள் வருகிறார்கள். அவர்கள் நடத்திய புகழ்பெற்ற சிரிப்பதிகாரம் என்ற நாடகப் பட்டிமன்றம் நடவடிக்கைகளை அப்படியே உங்கள் திருமுன்பு படைக்கின்றோம்.

படியுங்கள், அவர்களது பாணி பிடித்தால் அவர்களை விடாமல் பிடித்துக் கொண்டுவந்து உங்கள் திருமணங்களில் கெட்டிமேளத்தோடு பட்டிமன்றம் நடத்த ஏற்பாடு செய்து கொள்ளுங்கள். அவர்களது முகவரி வேண்டுமா? சிவத்திரு சிரிப்பானந்தவடிகள் மேற்பார்வை, சென்னை பிளாட்டாரம் என்றால் போதும்.

இந்த நூலிலிருக்கும் மற்றொரு எழுத்தோவியம் தலைவர்கள் ஜாக்கிரதை என்பது. இந்தத் தலைவரின் தலைமையிலே திருமணத்தை வைத்துக் கொள்ளலாம்.