பக்கம்:சிரிப்பதிகாரம்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14

சிரிப்பதிகாரம்



மற்றும் படாதிபதி, கலைமன்னன், பரதேசியார், கலைமணி இளையராஜா, உதயகுமாரன் போன்ற எத்தனையோ சிரிப்புப் பாத்திரங்கள் வருகின்றன.

அனைத்தும் களிம்பு நீக்கப்பட்டு, களிப்பினைப் பரிமாறிக் கலகலப்பினை உண்டாக்கும் சலசலப்பான பாத்திரங்கள்! நீங்களே படித்துப் பாருங்கள். பாத்திரங்களுக்கும், படிப்பவர்களுக்கும் இடையில் வீண் சாத்திரங்களைப் பற்றிப் பேசினால் ஆத்திரந்தானே வரும். ஆனால் ஒன்று, வாசகர்களுக்கு அத்தகைய ஆத்திரத்தை மூட்டி விடுவதில்தான் எழுத்தாளனின் ஆற்றலே அடங்கியிருக்கிறது.

ஆமாம் அய்யா! இந்தக் காலத்தில் ஒரு எழுத்தாளன் என்பவன், வாசகரின் மனத்தைப் பிடித்தால் மட்டும் போதாது, மார்க்கட்டையும் பிடிக்க வேண்டும்! காக்காய்ப் பிடித்தால் மட்டும் போதாது. காசையும் பிடிக்கவேண்டும். வாழ்க காக்காய்! வாழ்க காசு! வாழ்க காசு கொடுத்து வாங்கும் கலிகால வாசக வள்ளல்கள்!



எஸ்.டி. சுந்தரம்