பக்கம்:சிலப்பதிகாரக் காட்சிகள்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

8

சந்தனம் விற்பவர், முத்து வாணிகர், பவள வாணிகர், பலவகைத் தானியங்களை விற்பவர், மீன் வாணிகர் முதலியோர் உறைந்த தெருக்கள் இருந்தன. கடல் வாணிகத்தைக் கருதி சீனம், கிழக்கிந்தியத் தீவுகள், அரேபியா, கிரேக்க நாடு, ரோமாபுரி முதலிய நாட்டு வணிகர் வந்து தங்கியிருந்த தெருக்களும் இருந்தன.

நாள் அங்காடி

இந்த இரண்டு நகரங்கட்கும் இடையில் பெரிய சோலை ஒன்று உண்டு. அச்சோலையில் பெரிய சந்தை நாள்தோறும் கூடும். அது நாள் அங்காடி எனப்பட்டது. அங்குப் பெரிய பூதத்தின் கோயில் இருந்தது.

இந்திர விழா

புகார் நகரத்தில் வருடந்தோறும் இந்திரனுக்கு விழா செய்யப்பட்டு வந்தது. அவ்விழாச் சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரம் தொடங்கி இருபத்தெட்டு நாட்கள் நடைபெற்று வந்தது. அம்மாநகரத்தார் அவ்விழாவினைச் சிறப்பாகக் கொண்டாடி வந்தனர். விழா முடிவில் நகர மாந்தர் கடலில் நீராடி இன்பமாகப் பொழுது போக்குவார். விழாக் காலத்தில் தமிழ்நாட்டில் இருந்த பல சமயங்களைச் சேர்ந்த அறிஞரும் அங்குக் கூடுவது வழக்கம்; தத்தம் சமயத்தைப் பற்றிச் சொற்பொழிவு ஆற்றுதல் வழக்கம். இச் சொற்பொழிவுகளால் பொதுமக்கள் பல சமயங்களைப் பற்றிய செய்திகளை அறிய வசதி உண்டானது.