பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சித்தாந்த கலாநிதி உரைவேந்தர் ஒளவை துரைசாமி

17


ஏற்றுக் கொள்ளவில்லை. எனவே, ஓராண்டுக் காலம் வறிது கழிந்தது. காலக் கழிவை எண்ணிக் கவன்றிருந்த நிலையில் என் நல்வினைப் பேறாகப் பிள்ளையவர்கள் சேயாறு கழக உயர்நிலைப் பள்ளிக்குத் தலைமைத் தமிழாசிரியராக வந்து சேர்ந்தார்கள் (1931).

பணியேற்ற சில நாட்களுக்குள்ளேயே பிள்ளையவர்களின் புகழ் வெள்ளமென எங்கும் விரைந்து பரவலுற்றது. பள்ளி மாணவர்களும் ஆசிரியர்களும், நகர அறிஞர்களும் அவரைப் பற்றிப் பெருமையாகப் பாராட்டிப் பேசலானார்கள். ஏற்ற ஆசிரியரை எய்தப் பெறாமல் ஏக்கமுற்றிருந்த யான் ஊக்கம் பெற்று அவரை நேரில் ஆய்ந்தறியத் தொடங்கினேன். அவர் பிறரோடு பழகும் பண்பையும், பள்ளியில் பாடம் நடத்தும் பாங்கையும் கவனித்தேன். உரையாற்றும் அவைகட்குச் சென்று அவர் சொற்பொழிவுகள் பலவற்றைக் கேட்டேன். நான் எதிர்பார்த்த தகுதிகள் யாவும் அவரிடம் ஏற்றமுற நிறைந் திருப்பது கண்டு, என் தமிழ்ப் பசியைத் தணிவிக்கும் தகவுடையார் அவரே எனத் தெளிந்து, அவரை அணுகி என் விருப்பத்தைக் கூறி வேண்டிக் கொள்ளத் துணிந்தேன்.

பூவேத்தப் பழஞ்சைவப் பயிர்விளைத்த புகழ்ப்பிள்ளை
நாவேத்தத் திருவோத்தூர் நயந்தேற்றா ரருள் செய்வென்

வரைசாமி யரங்கமென மகிழ்ந்தாடு மனத்தவனே!
துரைசாமி! அருந்தமிழன் சுவைகனிந்த புலவ! கேள்

உலகுவளை கடல்மடுத்த வொருமுனியு மாற்றாமே
விலகு தமிழ் வியன்கடலை வியப்புறுமா றுண்டனை நீ!


உற்றுயர்வான் கலையனைத்து முரைகுற்ற மூன்றுமறக்
கற்றுயர்வான் வருமவர்க்குக் கற்பகம்போனின்றனை நீ!

சொல்வன்மை யஞ்சாமை சோர்வின்மை யொடுவாதில்
வெல்வன்மை யும்முடைய வித்துவச் சிகாமணி நீ!

கம்பர்கவிக் கவினையுமுட் கரந்தமைந்த பொருட்சுவையு
மிம்பருனைப் போலெவர்மற் றினிதறிந்தார்? எடுத்துரைத்தார்?