பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சித்தாந்த கலாநிதி உரைவேந்தர் ஒளவை துரைசாமி

19


பற்றி உசாவலுற்றார். நான் சுருக்கமாக என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு எடுத்துச் சென்றிருந்த பாடல் தாளை அவரிடம் கொடுத்தேன். அவர் பாடலை ஊன்றிப் படித்துப் பார்த்துவிட்டு, 'இது யார் எழுதித் தந்தது?’ என்று கேட்டார். ‘நான் இயற்றியதே’ என்றேன். பழகிப் பண்பட்ட பண்டிதர் பாடலாக இருப்பதால் கேட்டேன். இதில் என்னைப் பலவாறு சிறப்பித் திருக்கிறீர்களே, அச்சிறப்புக்களை என்னிடம் எவ்வாறு கண்டீர்கள்?’ என்றார். நான் அவர் அறியாமலே அவரைப் பல நாட்கள் ஆராய்ந்ததையும், அவ்வாராய்ச்சியில் கண்டவற்றுள் சிலவே அவை என்பதையும் எடுத்துரைத்தேன். அதனை அடுத்து ‘நீங்கள் யார் யாரிடம் என்னென்ன நூல் படித்திருக்கிறீர்?' என்று வினவினார். நான் பாடங்கேட்ட புலவர்களையும், அவர்களுள் ஒவ்வொருவரிடமும் படித்து முடித்த நூல்களையும் வரிசையாகக் கூறினேன். உங்கள் தகுதியையும், உணர்ச்சியையும், வேட்கை விருப்பத்தையும் இப்பாடலிலிருந்தே உணர்ந்து கொண்டேன். உங்களுக்குப் பாடம் சொல்லுவதில் மகிழ்ச்சியே. நல்ல நாள் பார்த்துக் கொண்டு வாருங்கள் என்றார்,

நான் நாள் பார்த்துக் கொண்டே வந்துள்ளேன். இன்று நல்ல நாளே என்றேன். அவர் 'அப்படியானால் இன்றே தொடங்கிவிடுவோம்’ என்று கூறி, ஒரு தாளில் சில பாடல்களை எழுதி என்னிடம் தந்து, இப்பாடல்களைப் படியுங்கள். ஒவ்வொரு நாளும் பாடம் தொடங்கும் பொழுது முதலில் இவற்றைச் சொல்ல வேண்டும் என்றார். அப்பாடல்கள் அகத்தியர், தொல்காப்பியர், திருவள்ளுவர், சேனாவரையர், நச்சினார்க்கினியார், பரிமேலழகர் ஆகிய புலவர் பெரு மக்களுக்கு வணக்கம் கூறுவனவாக இருந்தன. நான் முன்னமே இயற்றியிருந்த,

முத்தலை நெடுங்கடல் முழுது முண்டலர்
புத்தமிழ் துகுபொழில் பொதிய மேவிய
வித்தக முனிவரன் வளர்த்த மெல்லியல்

முத்தமிழ்க் கிழத்தியை முடிவ ணங்குவோம்.

என்னும் தமிழ் மொழி வாழ்த்துப் பாடலை முதலிற் கூறிப் பின் அப்பாடல்களையும் படித்தேன். முதலில் திருக்குறளை எடுத்துக் கொள்வோம் என்று கூறி, தம் புத்தகத்தையே கொடுத்து