பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22

செம்மொழிப் புதையல்


அதனை இன்று நினைக்கினும் அது என்னை நின்று நடுங்கச் செய்கிறது.

பள்ளியில் பாடம் நடத்தும் நேரம் நீங்க மற்ற நேரத்தில் ஒரு கணமும் ஓயாமல் ஒழியாமல் உழைத்தார். பள்ளியை விட்டு வீடு வந்ததும் திண்ணையில் புத்தகங்களைப் பரப்பிக் கொண்டு அமர்ந்து விடுவார். படிப்பதிலும், ஆராய்வதிலும், குறிப் பெடுப்பதிலும் சுற்றுப் புறத்தை மறந்து சுறுசுறுப்பாக ஈடுபட்டு விடுவார். அப்பொழுது அவர் குடியிருந்த வீட்டில் மின் விளக்கு வசதி இல்லை. இரவில் எண்ணெய் விளக்கின் முன்இருந்து நெடுநேரம் வரையில் எடுத்த குறிப்புகளைக் கொண்டு கட்டுரை, ஆய்வுரை, மறுப்புரை, நூலுரைகள் எழுதுவார். அவர் எப்பொழுது உறங்குவார், எத்தனை நேரம் உறங்குவார் என்பவை யாருக்கும் தெரியா. விடியற்காலம் விழித்துப் பார்த்தால் விளக்கின்முன் அமர்ந்து விரைவாக எதையோ வரைந்து கொண்டிருப்பார். விடிந்தபின் பள்ளி செல்லும் வரையில் அதே உழைப்பு அல்லென்றும் பகலென்றும் பாராமல், ஊனும் உறக்கமும் நினையாமல் பிள்ளையைப் போலத் தமிழுக்காகப் பேயுழைப்பு உழைத்தவர்களை நான் கண்டதில்லை. ஒய்வு என்பது இன்னதென்று அறியாத ஒர் அற்புதப் பிறவி அவர். அவர் மேற்கொண்ட முயற்சியில் அவருக்குத் துணை செய்யும் அறிவும் ஆற்றலும் பண்பும் வாய்ந்த புலவர்களோ, அன்பு கொண்டு ஆதரவு காட்டும் செல்வர்களோ இல்லாத அக்காலத்தில் புறங்கூறப் புல்லறிவினோர் பலர் இருந்தனர். பிள்ளையவர்கள் பிறர் துணை நாடாமல், புல்லறிவாளரின் பொறாமையையும் புறங்கூறுதலையும் பொருட்படுத்தாமல், தமக்குத் தாமே முயன்று பண்படுவதில் முனைந்து உழைத்தார். அன்று அவர் உழைத்த அவ்வுழைப்பே பின்னர் அவரைப் பண்டை உரையாசிரியர்கள், வரிசையில், அவர்களோடு சரியாசனத்தில், ஏற்றி, 'உரைவேந்தர்' என்று புலவருலகம் புகழ் கூறும் உயர்நிலையை எய்துவித்தது.

எளிமையில் வளமை

பழந்தமிழ்ப் புலவர்க்ளின் பண்பட்ட வாழ்க்கை சங்கத்தமிழ் நூல்களில் நன்கு விளக்கப்பட்டுள்ளது. அவர்கள் பரிசில் வாழ்க்கையினராயினும் வரிசைக்கு வருந்துவோராகவும்,