பக்கம்:ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8 A ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை



சங்கம் வளர்த்த தமிழ் இலக்கியத்தின் புதினப்படைப்புத் துறையில் மாண்புமிக்கதொரு மறுமலர்ச்சியையும், மகத்தானதொரு திரும்பு முனையையும் ஏற்படுத்திய பெருமை, சரித்திரப் பேராசிரியர் அமரர் கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கே உரியதாகும். சரித்திரத்தை வாழவைத்த கல்கி, சரித்திரத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்!-காலத்தின் வரலாற்றில் அடங்கியது சமுதாயம் ; ஆகவேதான், சமுதாயத்தின் சீர்திருத்தம் மிகுந்த புதுமை வாழ்வில் கல்கியின் பணி சிறக்கவும் திறக்கவும் முடிந்தது -அதனாலேதான், சரித்திரத்தைப் பேச வைத்த சிவகாமியும், சமூகத்தைச் சிந்திக்க வைத்த தாரிணியும் மக்கள் இலக்கியத்திலே பேராசிரியர் கல்கியைப் போலவே இன்றும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். வரலாறும் சமூகமும் இரண்டறக் கலந்த இப்படிப்பட்டதொரு பண்பாட்டுப் பெருமையில், சிறுகதை முன்னோடி வ. வே. சு. ஐயரும், நாவலின் வழிகாட்டி வேதநாயகம் பிள்ளையும் பெருமிதம் கொள்வார்கள் அல்லவா ?
புதிய அலை - பழைய புரட்சி !

படைப்பு இலக்கியத் துறையிலுங்கூட, அண்மைக் காலத்திலே, ஒரு நெருக்கடி நிலை-ஒரு சோதனை நிலை ஏற்பட்டு விட்டது ! —அதுதான், புதிய அலை என்கிற நாசகாரச் சோதனையால் வந்த வினை ; அது சாமன்யமான வினையாக வந்ததா, என்ன?-ஊஹூம் ?-பயங்கரமான தீவினையாகவே விளைந்தது. பாரதச் சமுதாயத்தில், தமிழ்ச் சாதியின் ஒளிமிக்க எதிர்காலமாகத் திகழக் கூடிய வாய்ப்பும் வசதியும் பெற்ற இளந் தலைமுறையினரின் நெறியும் முறையும் சார்ந்த-ஒழுங்கும் கட்டுப்பாடும் தழுவிய-ஒழுக்கமும் பண்பும் மேவிய நல்ல, ஆரோக்கியமான இளம் உள்ளங்களையெல்லாம் திசை திருப்பித் தடம்புரளச் செய்து பாழ்படுத்திவிடத்தக்க ஊழ்வினையாகவே இந்தப் புதிய அலைச் சோதிப்பு வாய்க்க நேர்ந்தது !