பக்கம்:ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10 Δ ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை



கொண்டிருந்த ஆரோக்கியமான சூழலைச் சோதிக்கவும் கெடுக்கவும் கூடிய நஞ்சாகவும் நச்சுக் காற்றாகவும் ஏன், தொற்று நோயாகவும் கூட இந்தப் புதிய அலை உருக்காட்டுப் படலம் நடத்தத் தொடங்கி விட்டது !

இவ்வாறாகப் படைப்பு இலக்கியத்திற்கு ஒரு நெருக்கடி நிலைமையை ஏற்படுத்தத் துணிந்த எழுத்தாளர்களும் எழுத்தாளிகளும் அடங்கிய அந்த நாசகாரக் கும்பலின் ‘நாலு பேர் வழிகளை’த் தட்டிக் கேட்க நேற்றுவரையிலும் கூட, சமூகப் பிரக்ஞையும் சமூக வளர்ச்சியில் நாட்டமும் கொண்ட யாருமே முன் வரவில்லை; முன்னே வரத் துணியவும் இல்லை ! ஏன், இலக்கியத்தை அந்தக் காலத்திலே அவ்வப்போது நிறுவை செய்தும், அளவை செய்தும் விமரிசனம் செய்து வந்த க. நா. சு. வையும் காணவில்லையே ?

திருப்பாற்கடலிலே ஆலம்- நஞ்சு கலந்து விட்டது!...

அந்த நஞ்சைக் கண்டத்தில் தாங்கி, திருப்பாற்கடலை மீண்டும் புனிதம் உடையதாகவும், பொற்பு மிக்கதாகவும் ஆக்கும் கடமைப் பொறுப்பை எனக்கு நானே ஏற்றுக் கொள்ளவும் வேண்டியவன் ஆனேன்! நஞ்சைக் களைந்து போக்க வேண்டுமேயானால், அமிர்தத்தின் பெருமையை உணர வேண்டும் ; உணர்த்தவும் வேண்டும் ! அப்போதுதானே, அமுதத்தின் திருச்சந்நிதானத்திலே, நஞ்சு தலைகுனிய வாய்ப்புக் கிட்ட முடியும் ? -

அந்தச் சமுதாயத் துரோகிகள் நால்வரையும் சமூகத்தின் குற்றவாளிக் கூண்டிலே நிறுத்தி, சாங்கோபாங்கமான இலக்கிய விசாரணையை நடத்திக் காட்டவே, “சுதந்திரம்’ என்னும் வார இதழில் பூவையின் பக்கங்கள் என்னும் சூடும் சுவையும் நிறைந்த பகுதி ஒன்றை உருவாக்கி, ‘இன்றையத் தமிழிலே படைப்பு இலக்கியம் எங்கே போய்க் கொண்டிருக்கிறது?’ என்பது பற்றித் தீரத் தெளிய ஆராயத் தொடங்கினேன்.