பக்கம்:ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22 Δ ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை




அவளுடைய அலுவலகத்திற்கு வந்து, அவன் அவளைச் சந்திப்பதை அவள் விரும்பவில்லை. ‘ஆத்து’க்கு (ஆறு அல்ல வீடு) வரச்சொல்லவும் இஷ்டமில்லை. “...அவனைத் தேடிக் கண்டு பிடிக்கிறோம்னே வச்சுக்கோ; இந்த நியாயத்தைச் செய்யறதுக்கு உன்னைக் கெடுத்த அவனாலே மட்டுமே உனக்குப் புனர் வாழ்வு கொடுக்க. முடியும் என்கிற இந்த நியாயத்தை செய்யறதுக்கு அவனுக்கு என்ன நியாயம் இருக்கு?... அவன் உன்னை நம்பமாட்டான் ; காரை நிறுத்திக் கையைப் பிடிச்சு இழுத்தவாளோடெல்லாம் போறவளாத்தானே அவன் உன்னை நினைப்பான் ? வெங்கு மாமாவின் கீதோபதேசத்தில் கங்காவின் அசட்டுத் தூக்கம் கலைந்திருக்கலாம்.

இதற்குமுன் அவனும் அவளும் சந்தித்தார்களே , அதே இடத்தில், கல்லூரிக்கு முன், பஸ் நிறுத்தத்தில், அல்லது ஐந்தரை மணிக்குத் தீவுத் திடலில் அவ்விருவரும் சந்திப்பதாக ஏற்பாடு ஆகியது.

கங்கா இப்போது தனக்குத் தானாகவும், தன்னில் தானாகவும் பேசிக் கொள்ளுகிறாள் ; பெருமையோடு பேசிக் கொள்ளுகிறாள் ; பெருமிதத்தோடும் பேசிக் கொண்டிருப்பாள் போலிருக்கிறது! அவள் என்ன பேசிக்கொள்கிறாள், தெரியுமோ ?- இப்போ நான் ரொம்ப ஜாக்கிரதையா இருக்கேன் ; நான் அப்போ மாதிரி அசடு இல்லே, நான் இப்போ ரொம்ப ரொம்பச் சமத்து !...’

அடி, பாவி ..!

கங்கா எனும் மனித நாடகம் !

கிங்கா !...

நல்ல மனித நாடகம் !

ஆனால்..?