பக்கம்:ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பூவை. எஸ். ஆறுமுகம் Δ 31




அதுவும் இப்போது மழையில் நனைந்து ஈரத்தில் நின்று, தந்தக் கடைசல் போன்ற கால்களும் பாதங்களும் சிலிர்த்து நீலம் பாரித்துப் போய்,பழந்துணித் தாவணியும் ரவிக்கையும் உடம்போடு ஒட்டிக்கொண்டு, சின்ன உருவமாய்க் குளிரில் குறுகி, ஒர் அம்மன் சிலை மாதிரி அவள் நிற்கையில் அப்படியே கையில் தூக்கிக் கொண்டு போய்விடலாம் போலக் கூடத் தோன்றும்..”

அம்மன் சிலை பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்னரும் கூட திருடு போய்க் கொண்டுதான் இருந்தது !

ஆகவே, பிரபுவைச் சொல்லிக் குற்றம் இல்லை. ஆனாலும், திருட்டு, திருட்டுத் தானே? - கற்புத் திருட்டு ஆயிற்றே ? - அதனாலேதான், அவனை இரண்டாவது குற்றவாளியாகச் சமுதாயத்தின் குற்றக் கூண்டில் விசாரணைக்கென நிறுத்த வைத்திருக்கிறேன்! - குற்றம் செய்த நெஞ்சுடன், “...அந்த ஈவினிங்கோட நான் உன்னை மறந்துடறது நல்லதுன்னு மறந்துட்டேன். நான் உனக்கு ஒரு உண்மையைச் சொல்லட்டுமா ? என் லைஃப்லே, நானாகக் கெடுத்த ஒரே பெண் நீ தான்!” என்பதாகக் குற்றத்தை உணர்ந்து பேசினவன். இதற்குச் சற்று முந்தி, இதே கங்காவிடம் என்ன பேசினான் ? - ‘அவங்க அவங்க கஷ்டங்கள் அவங்க அவங்களோட: யாரோட கஷ்டத்தையும் யாரும் வாங்கிக்க முடியாது!” என்றான். இதற்குப் பின்னே, இதே பிரபு, இதே கங்கா விடம், “...எதுவோ விளையாட்டுத் தனமான ஒரு விபத்து மாதிரி நடந்துட்டதை மறந்துட்டு இருக்கணும் நீ ! அதுக்காக, வாழ்க்கையையே வீணாக்கிக்கறதா ? என் ஷூட் டேக் திங்க்ஸ் ஈஸி இன் லைஃப்” என்று தப்பும் குற்ற உணர்வோடு பேசவும், பிறகு, “உனக்குக் கல்யாணம் செய்து வெச்சுப் பார்க்கனும் எனக்கு ரியலி...!” என்பதாகச் சமத்கராமாகவும் சாதுர்யமாகவும் ஏன், அனைத்தையும்விட, சத்தியமாகவும் பேசத் தயாராகிறான்!