பக்கம்:ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32 Δ ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை



பல மனிதர்கள் பல நேரங்களில் எவ்வாறு இயங்குவார்கள், அல்லது, இயக்குவார்கள் என்பதற்கு நேருக்கு நேரான உயிர்ச் சாட்சியாகத் தன்னுடைய யதார்த்தமான வாழ்விலும், வாழ்வின் நடைமுறையிலும் விளங்கிய - விளங்குகிற பிரபுவுக்கு ஜெயகாந்தன் சில நேரங்களில், சில மனிதர்கள் என்பதாகப் பேசப்படுகிற தனது நவீனத்தில் வழங்கிய நவீன அந்தஸ்து என்ன வென்னும் வினாவுக்குக் கிடைக்கக் கூடிய விடையிலே தான், ஜெயகாந்தனுக்கு இந்தத் தமிழ்ச் சமுதாயத்தில் - தமிழ்ச் சமுதாயத்தின் இலக்கியத்தில் வழங்கப்பட்டுள்ள அந்தஸ்தின் நிலை நிர்ணயப்படுத்தப்பட வேண்டும் !... இல்லையா ?

கங்காவுக்குத்தான் பிரபு கதாநாயகன் ! - சில நேரங்களில் சில மனிதர்கள் என்னும் கதைக்கு - தொடர் கதைக்கு - நாவலுக்கு அல்ல; அல்லவே அல்ல !

பிரபு, அவன் ஒப்புக் கொண்டது மாதிரி யோக்கியன் அல்லதான்; என்றாலுங்கூட, பிரபு என்னும் மனித ஆண் பிள்ளை பேடித்தனமாகவும் பெண் பிள்ளைத் தனமாகவும் கங்கா எனப்படும் அந்த மனிதப் பெண் பிள்ளைக்கு - ஆண் பிள்ளைத்தனம் கொண்ட கன்னிக்கு - கன்னிகழிந்தவளுக்கு - கன்னி கழித்தவளுக்குச் சில நேரத்தில் - ஊஹூம், சில நேரங்களிலே துணை நின்றவன்; துணையாக நின்றவன்; துணைக்கு நின்றவன் ! - அவன் பெற்றுள்ள. போலியான இத்தகுதி மட்டிலுமே, அவன் பெறத்தக்க அசலான - அயனான கதை நாயகன் பதவிக்கு அவனைத் தகுதியுடையவனாக ஆக்கி விடுமா ?... ஆக்கிவிடலாமா ?... ஆக்கி விட முடியுமா ?. முடியாது! கூடாது’ - அவன் அற்ப சொற்ப மான பேர் வழியல்லவே ? மேலும், அவன் அழிந்த ஆத்மாவும்கூட! - புவர் ஸோல்! பாவம், பாவம், பாவம்! -

பிரபுவை மனத்திலும் மனத்தாலும் நினைக்கிறேன்: நினைத்துப் பார்க்கிறேன்.