பக்கம்:ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பூவை. எஸ். ஆறுமுகம் Δ 33




நடந்தது இதுதான் :

சற்று முன்பு நடந்ததை நினைவூட்டாமல், ஒரு மகாமகக் காலத்திற்கு முன், இதே போன்றதொரு மாலை வேளையில் நடந்த அந்தப் பொல்லாத அந்தி நேரத்துச் சம்பவத்தை நினைவூட்டும்போது, “...உங் களுக்கு ஞாபகம் இருக்காது; நம்ப பேசிண்ட ஒவ்வொரு வார்த்தையும், நம்ப இருந்த ஒவ்வொரு பொஸிஷனும், ஏன், ஒவ்வொரு அசைவும் எனக்கு (நேக்கு) ஞாபகம் இருக்கு... நீங்க என் தோளைப் பிடிச்சு உலுக்கினேள்; அப்போ, நான் சொன்னேன்: எனக்குப் பயமா இருக்கு: இதெல்லாம் புதுசா இருக்கு'ன்னு. அப்போ, நீங்க கேட்டேள், கன்னத்திலே அறையற மாதிரி; ‘எதுக்கு இந்த சர்ட்டிபிகேட்டெல்லாம்’னு ...ஞாபகம் இருக்கா ?” என்று ஞாபகப்படுத்துகிறாள் கங்கா.

அவள் கொடுத்த ஞாபகச் சீட்டு அவனது அமைதியைக் கெடுத்து அதற்குச் சீட்டுக் கொடுத்திருக்கலாம். அவன் நெற்றியை எனோ, எப்படியோ சொறிந்து கொள்கிறான்.

“ஐ ஆம் ஸாரி. தொந்தரவா இருக்கா? பன்னெண்டு வருஷத்துக்கு முன்னாலே ஒரு அருமையான சாயங்காலப் பொழுது பாழாப் போனது மாதிரி இன்னிக்கும் ஒரு ஈவினிங் வேஸ்டாப் போறதேன்னு வருத்தமா இருக்கா? மிஸ்டர் பிரபு, வேஸ்டாப் போறது ஒரு ஈவினிங் மட்டும் இல்லேன்னு சொல்றதுக்காகத்தான் உங்களைக் கூப்பிட்டேன்.”

அன்றைக்கென்று படு அசடாக இருந்த அதே கங்கா இன்றைக்கென்று படுசமர்த்தாக ஆகிச் சூடாகச் சொன்ன சுடு சொற்கள் அவனுக்குச் சூடு போட்டிருக்கலாம். அவன், தப்பு, தப்பு, மிஸ்டர் பிரபு நெஞ்சிலே கை வைத்தவனாகவும், நெஞ்சத்திற்கு வஞ்சனை செய்யாதவனாகவும், அதைவிடவும், நெஞ்சையே பிளந்து காட்டுபவனாகவும் பேசத் தலைப்படுகிறான்: