பக்கம்:ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6  Δ  ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை



வாழ்க்கை என்றால் சோதனை ! சோதனை என்றால் வாழ்க்கை ! - வாழ்க்கையின் சோதனையிலே, அல்லது, சோதனையின் வாழ்க்கையிலேதான், மனிதன் விளையாடு கிறான் ; விளையாட்டுக் காட்டுகிறான் !

மனிதனின் இவ்விளையாட்டிலேதான், அவனுக்கென அமைந்த-அமைக்கப்பட்- அல்லது, விதித்த-விதிக்கப்பட்ட இவ்வாழ்க்கை-இம் மண் வாழ்க்கை தவமாகவும் யோகமாகவும், கனவாகவும், நனவாகவும், போராகவும் போராட்டமாகவும், தாபமாகவும் தாகமாகவும், சோகமாகவும் ஆனந்தமாகவும், ஏக்கமாகவும் ஏமாற்றமாகவும் உருக்கொண்டு உருக்காட்ட, அதே வாழ்க்கை, அவனுக்கு -அம்மனிதனுக்குச் சோதனை அனுபவம் என்கிறதாய் முலைப்பாலையும் காலம் கடந்த காலத்திலும், நேரம் கெட்ட நேரத்திலும், வேளை தவறிய வேளையிலும் புகட்ட நேர்கிறது ! விளைபலன் : அவன் யதார்த்தமான வாழ்க்கையை யதார்த்தமாகப் படிக்கவும், படித்துக் கொள்ளவும், படித்துக் கொடுக்கவும் நேருகிறது!- மனிதனுக்குப் பிள்ளையார் சுழி போட்ட அதே மண், அவனுக்கு முற்றும் போடவும் தவறுவதில்லை ; தவறி விடுவதும் இல்லைதான் !

இதுதான் மனிதனின் கதை !

மனிதனின் கதை. இவ்வளவுதான் !

ஆனால், ஒன்று :

இது ஒரு மனிதனின், அதாவது, ஒரேயொரு தனி மனிதனின்-தனிப்பட்ட மனிதனின் கதை மட்டும் அல்லவே? உலகம் தழுவிய மனிதனின் கதையும், இதுவே அல்லவா ?-ஆமாம் ; உலக மனிதனின் கதையும் இதுவாகத்தானே இருக்கவும் வேண்டும் ? -இருக்கவும் முடியும் ?
உலகமும் உலக மனிதனும்:
உலகம் தோன்றியது ; மனிதன் தோன்றினான் !..