பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
முன்னுரை

ங்ககாலம் தொடங்கி இன்றைய நவீன இலக்கியக் காலநெடுகிலும் தமிழுக்கு அரும்பணியாற்றிய அற்புதமான கலை இலக்கியவாதிகளை ஈன்றுள்ளது ‘தஞ்சை[1] வண்டல்மண்’ என்று சொன்னால் மிகையில்லை.

இந்திய மொழிகளில் முதன் முதலாக எழுதப்பட்ட நாவல் வங்காளியில்தான். 1865 இல் பங்கிம்சந்திரர் எழுதிய ‘துர்கேச நந்தினி’ என்று சொல்லப்படுகிறது. அதன் பின்னர் 1879 இல் தமிழில் வெளிவந்தது மாயூரம் வேதநாயகம்பிள்ளையின் பிரதாப முதலியார் சரித்திரம். இந்த நாவல்தான் முதன் முதலில் தமிழுக்குப் பெருமை தேடித்தந்தது. அன்று தொடங்கியது நவீன இலக்கியம் - நாவல். இதன் அடுத்தக் கட்டப் பரிணாம வளர்ச்சியில் முகிழ்த்தது சிறுகதை.

தஞ்சையை வளப்படுத்திய காவிரி நதி அதன் நீள அகல ஆழத்தைப் போலவே அந்த மண்ணில் தோன்றிய நவீன இலக்கியவாதிகள் பல்வேறு கால கட்டத்தில் குறிப்பிடத்தக்க சாதனை புரிந்திருக்கிறார்கள். அதை நாம் கவனமாக நினைவில் கொள்ளவேண்டும் என்பதைச் சொல்லுவதே எனது தலையாய நோக்கமானது.

தமிழில் முதல் நாவல் என்று போற்றப்படும் ‘பிரதாபமுதலியார் சரித்திரம்’ முதலாக மாதவய்யாவின் ‘பத்மாவதி சரித்திரம்’ ஈறாக ஆறு நாவல்கள் வெளிவந்திருப்பது நன்கு தெரிந்தும், கும்பகோணம் இஞ்சிக்குடி நடேச சாஸ்திரியார் எழுதிய நாவலான ‘தீனதயாளு’ 1900 ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்துள்ள முதல் நாவல் என்று அவராலேயே கூறப்படுகிறது.

அவர் நிலைப்பாட்டை கூர்ந்து கவனித்தால் ஓர் உண்மை தெரிகிறது. அதாவது அவரே மேலைநாட்டினர் எழுதிவந்த துப்பறியும் தொனியில் 1894 இல் ‘தானவன்’ என்ற நாவலை வெளியிட்டுள்ளார்.


  1. தஞ்சை என்று இங்கே குறிக்கப்பெறுவது 1950 வரை இருந்த தஞ்சை மாவட்டத்தைக் குறிக்கப்படுவதாகும். பின்னர் தஞ்சை மாவட்டத்தின் மேலப்பகுதியில் கொஞ்சம் புதுக்கோட்டை மாவட்டத்தில் இணைக்கப்பட்டுவிட்டது. மீதமிருந்த தஞ்சை மாவட்டம் தற்போது தஞ்சாவூர் மாவட்டமாகவும், திருவாரூர் மாவட்டமாகவும், நாகப்பட்டினம் மாவட்டமாகவும் பிரிக்கப்பட்டுள்ளன.